Published : 02 Jan 2020 11:26 AM
Last Updated : 02 Jan 2020 11:26 AM
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
அதுமட்டுமல்லாமல் நேற்று, சென்னையில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, பாஜக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், பெரம்பலூரில் தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஜன.2) வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்தியைக் கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?
சீமான் பேச்சு குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி, அமித் ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாகக் கைது செய்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை. நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT