Published : 02 Jan 2020 07:40 AM
Last Updated : 02 Jan 2020 07:40 AM
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்தில் சிக்கி 318 பேர் காயமடைந்தனர்.
சென்னையில் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், பாலவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் புத்தாண்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 48 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 150 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 57 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 63 பேரும் என மொத்தம் 318 பேர் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பலத்த காயம் அடைந்தவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே தரமணி காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், புஷ்பராஜ் மீது மோதினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதேபோல பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா(45) மீது பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஆட்டோவை ஓட்டி வந்த கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டனை(34) அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 304 பேர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT