Published : 01 Jan 2020 11:23 AM
Last Updated : 01 Jan 2020 11:23 AM
புத்தாண்டான 2020-ம் ஆண்டு பிறந்துள்ள இந்நாளில், விடைபெற்றுச் சென்ற 2019-ம் ஆண்டு சேலம் மாவட்டத்துக்கு செழிப்பையும் வளர்ச்சியையும் அள்ளிக் கொடுத்து, பசுமையான நினைவுகளை மலரச் செய்துள்ளது.
புத்தாண்டு பிறந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு, விடைபெற்றுச் சென்ற 2019-ம் ஆண்டு சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என்று கூறும் வகையில் சேலம் மாவட்டத்தில் பல சிறப்பான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு குடிநீரையும், 12 மாவட்டங்களின பாசன நீர் தேவையை பூர்த்தி செய்யும் மேட்டூர் அணையானது, காவிரி அன்னையின் கருணையினால் நடப்பாண்டிலும் நிரம்பி ஒட்டுமொத்த தமிழகத்துக்கே மகிழ்ச்சியை கொடுத்தது.
மேட்டூர் அணை இருந்தும், காவிரி நீர் சேலம் மாவட்டத்து பாசனத்துக்கு பயன்படவில்லை என்ற மாவட்ட மக்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில், சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளுக்கு பயன்படும் வகையில், மேட்டூர் உபரி நீர் திட்டம் வகுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளுக்கும் காவிரி நீரைக் கொண்டு செல்லும் திட்டமும் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி தெரிவித்துள்ளது, மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா தலைவாசலில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது, சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவில் அடையாளப்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, ஈரடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதி, திருவாக்கவுண்டனூர் மேம்பாலம், சேகோ சர்வ் மேம்பாலம் ஆகியவை 2019-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தவை. மாவட்டத்தில் முதன் முறையாக வன விலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், அதில் சிறுத்தை, யானை மற்றும் அரிய பட்டாம்பூச்சி ஆகியவை சேலம் மாவட்டத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது 2019-ல் தான்.
சேலம் ரயில்வே கோட்டமானது, முக்கிய ரயில் நிலையங்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்று, தெற்கு ரயில்வேயின் முதல் ரயில்வே கோட்டம் என்ற சாதனையைப் பெற்றது. சேலம் மாநகராட்சி சார்பில் மாநகரில் பல்வேறு வசதிகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட 12 பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது மாநகர மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நூற்றாண்டு பழமையான பழைய பேருந்து நிலையம் பழமை காரணமாக, இடித்து அகற்றப்பட்டது. எனினும், அதே இடத்தில் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சேலத்தின் அரசியல் மேடையான போஸ் மைதானத்தில் மட்டுமே நடைபெற்று வந்த அரசுப் பொருட்காட்சி, புதிய பேருந்து நிலையம் அருகே புதிய மைதானத்தில் முதன் முறையாக நடைபெற்றது. இதன் மூலம் சேலம் மாநகராட்சிக்கு கூடுதலாக ஒரு மைதானம் கிடைத்துள்ளது.
சேலம் மற்றும் மாவட்டம் முழுவதும் சென்ற 2019-ம் ஆண்டில் கனமழை பெய்து, நடப்பாண்டில் குடிநீர் மற்றும் பாசனத்துக்கான நீர் தட்டுப்பாட்டினை போக்கியுள்ளது.
சேலத்திலும், மாவட்டத்தில் பல ஊர்களிலும் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய பாலங்கள், புதிய திட்டங்கள் நடப்பாண்டில் பயன்பாட்டுக்கு வருவதற்கு அடிக்கோலிட்டது என்ற பெருமையுடன் 2019-ம் ஆண்டு விடைபெற்றுச் சென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக நடப்பு 2020-ம் ஆண்டில் சேலம் மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெறும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டினை கொண்டாடுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...