Published : 31 Dec 2019 08:36 PM
Last Updated : 31 Dec 2019 08:36 PM

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வேண்டும்: பாமக தீர்மானம்

ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டத்தின் அடிப்படையில்தான் முடிவெடுக்க வேண்டும். அதன்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும் என பாமக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாமக சார்பில் நடத்திய புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 18 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அதில் சில தீர்மானங்கள் கூட்டணியை மீறி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்த பாமகவின் தீர்மானங்கள்:

அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு

இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் அனைத்தும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகத்தால் நிரப்பப்படுகிறது.

இந்த இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், உயர்வகுப்பு ஏழைகள் ஆகியோருக்கு முறையே 15%, 7.5%, 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் மட்டும் 27% இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது பெரும் அநீதி.
தமிழ்நாட்டிலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே இருந்திருந்தால் 69% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்பட்டிருக்கும்.

அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைந்தபட்சம் மத்திய அரசின் 59.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் இந்த ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் தேசிய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு மறுக்கப்படுவது நியாயமற்றது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் பலமுறை கடிதம் எழுதியும் எந்தப் பயனும் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை அல்லது காலவரையற்ற பரோல்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாகத் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் இன்று வரை 479 நாட்களாகிவிட்ட நிலையில் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டத்தின் அடிப்படையில் தான் முடிவெடுக்க வேண்டும். அதன்படி, 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும்.

7 தமிழர்கள் விடுதலை பற்றி முடிவெடுப்பதில் ஆளுநர் மாளிகை காலதாமதம் செய்தால், 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்களுக்குத் தற்காலிக நிவாரணம் வழங்கும் வகையில் அவர்களுக்கு நீண்டகால பரோல் வழங்குவதற்கான வாய்ப்புகளை தமிழக அரசு ஆராய வேண்டும்.

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்; அதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை

இந்தியா முழுவதும் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

அதையேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 14 விழுக்காட்டிலிருந்து 27% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு வேறெங்கும் இல்லாத அளவுக்கு 82 விழுக்காடு ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம், ஹரியாணாவிலும் தமிழகத்தை விட அதிகமாக முறையே 78%, 70% இட ஒதுக்கீடு உள்ளது.

சமூக நீதியை வலுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அதன்படி இட ஒதுக்கீட்டின் அளவை மாநில அரசு அதிகரிக்க வேண்டும்.

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக

தமிழ்நாட்டின் முக்கியப் பாசன ஆதாரமாகத் திகழ்வது காவிரி. தமிழகத்தின் 14 மாவட்டங்களில் சுமார் 30 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், 20 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு திகழ்கிறது. ஆனால், பருவமழை சரியாகப் பெய்யாததாலும், கர்நாடகத்துடனான காவிரி சிக்கல் காரணமாகவும் காவிரியில் தண்ணீர் வருவது கணிக்க முடியாததாக உள்ளது.

குறித்த காலத்தில் காவிரியில் தண்ணீர் வராததால் காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளில் ஒருமுறை கூட குறுவை சாகுபடி செய்யப் படவில்லை. இதனால் காவிரி பாசன மாவட்டங்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் சுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்வது வாடிக்கையாகிவிட்டது.

காவிரி ஆற்றை வற்றாத ஜீவநதியாக மாற்றுவதற்குச் சிறந்த வழி கோதாவரி -காவிரி இணைப்பு ஆகும். கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் 1100 டி.எம்.சி. நீர் வீணாகக் கடலில் கலக்கும் நிலையில், அதில் ஒரு பகுதியை காவிரியில் திருப்புவதன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களை மீண்டும் வளம் கொழிக்கும் பகுதியாக மாற்ற முடியும். காவிரியில் வரும் கோதாவரி நீரை குண்டாறு திட்டத்துடன் இணைப்பதன் மூலம் தென் மாவட்டங்களும் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் அற்புதமான இத்திட்டத்தை வரும் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பதுடன், அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் ரூ. 1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்

தமிழ்நாடு இயல்பாகவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகும். தமிழகத்தில் ஓடும் நதிகளில் தாமிரபரணியைத் தவிர மற்ற ஆறுகளின் தண்ணீருக்காக பிற மாநிலங்களைத் தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் பாசனத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம்தான் வேளாண்மையைச் சிறப்பாகச் செய்ய முடியும். ஆனால், இந்தியாவிலேயே போதிய அளவில் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் கவலையளிக்கும் உண்மையாகும்.

பாசனக் கட்டமைப்புகளில் தமிழகத்தை விட மிகவும் மோசமான நிலையில் இருந்த ஆந்திரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க வகையில் பாசனத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 94,55,000 ஹெக்டேர் பரப்பளவிலும், ராஜஸ்தானில் 76,50,000 ஹெக்டேர் பரப்பளவிலும் பாசன வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இன்று வரை பாசன வசதி பெற்ற நிலங்களின் பரப்பளவு 26,79,000 ஹெக்டேர் மட்டும் தான்.

தமிழ்நாட்டில் நீடித்த விவசாயம் செய்ய இப்போதுள்ள பாசனப் பரப்பை மும்மடங்காக உயர்த்த வேண்டும். முதல் கட்டமாக தமிழகத்தின் பாசனப்பரப்பை 50 லட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்த வேண்டும். அதற்குத் தேவையான நீர்ப்பாசன பெருந்திட்டத்தை ரூ.1 லட்சம் கோடியில் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ-கார்பன் திட்டங்களை ரத்து செய்யவேண்டும்

தமிழ்நாட்டிற்கும், காவிரி பாசன மாவட்டங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பவை ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஆகும். தமிழ்நாட்டில் இதுவரை 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், விரைவில் 1863.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மேலும் இரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவுள்ளது. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் 5000 சதுர கி.மீ. பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருக்கும்.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதை தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்

காவிரி படுகைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் மட்டுமின்றி வேறு சில அச்சுறுத்தல்களும் உள்ளன. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 53 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த காலநிலை அவசரநிலையைப் பிரகடனம் செய்க

காலநிலை மாற்றமும், அதன் விளைவாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதும் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன் 14 டிகிரி செல்சியஸாக இருந்த பூமியின் சராசரி வெப்பநிலை தொழில் புரட்சிக்குப் பிறகு இப்போது 15.1 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது.

ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரித்ததற்கே மிகப்பெரிய அளவில் இயற்கைப் பேரழிவுகளை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலை கட்டுப்படுத்தப்படாவிட்டால் எந்த நேரமும், எந்தவகையான பேரழிவும் நம்மைத் தாக்கும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாட்டில் பேரழிவுகள் ஏற்படுவதற்காக அறிகுறிகள் கடந்த சில ஆண்டுகளாக தென்படத் தொடங்கியுள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டுமானால், உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை 2030-ம் ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டும்.

நமது மத்திய, மாநில அரசுகளும் காலநிலை நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் சாலைகளில் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. பாமகவும் இதை பல தருணங்களில் சுட்டிக்காட்டியிருப்பதுடன், போராட்டங்களையும் நடத்தியுள்ளது. இத்தகைய சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும் வரை, அவற்றில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80% உள்ளூர் ஒதுக்கீடு தேவை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து விட்டன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை பணிகளில் பெரும்பாலானவற்றை வட இந்தியர்கள் சட்ட விரோதமாக கைப்பற்றி வரும் நிலையில், அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளாவது மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளிலும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஊடுருவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் அதிகபட்சமாக 80% வரை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய இத்தகைய சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காட்டை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களையும் பொதுத்துறை நிறுவனங்களில் தொழிலாளர் நிலை பணியிடங்களை முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.

படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை வேண்டும்

குடும்ப அளவிலும், தேசிய அளவிலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தி வருகிறது. கட்டுப்பாடு இல்லாமல் மது விற்கப்படுவதன் விளைவாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி சில மாணவிகளும் கல்வி நிறுவன வளாகத்திலேயே மது அருந்துவதும், மயங்கி விழுவதும் வாடிக்கையாக மாறிவிட்டது.

இது யாருக்கும் பெருமை அளிக்கும் செயல் அல்ல. இத்தகைய சீரழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், காலவரையறை நிர்ணயித்து படிப்படியாக முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2020-ம் ஆண்டை அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படைகளை வலுப்படுத்தும் ஆண்டாக கடைப்பிடிக்க உறுதி

பாமகவின் புத்தாண்டு பொதுக்குழு கூட்டங்களில் 2018-ம் ஆண்டு இளைஞர்கள் எழுச்சி ஆண்டாகவும், 2019-ம் ஆண்டை அரசியல் விழிப்புணர்வு ஆண்டாகவும் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. இவற்றின் காரணமாக அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சக்தியை தயார்படுத்தும் பணிகளை பாமக தொடங்கியுள்ளது. இதற்காக மருத்துவர் அன்புமணி ராமதாஸின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகியவற்றை வலுப்படுத்துவது என்று பாமக சிறப்பு பொதுக்குழு உறுதியேற்கிறது.

அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை ஆகியவற்றுக்கு முறையாக பயிற்சிகள் அளிப்பது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் அன்புமணி படைகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தத் தீர்மானங்கள் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x