Published : 31 Dec 2019 03:59 PM
Last Updated : 31 Dec 2019 03:59 PM
மதுரை அருகே மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர், தன்னுடைய தேர்தல் செலவு கணக்கை ‘பேஸ்புக்’கில் பதிவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித்தேர்தலில் மேலூர் ஒன்றிய மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நாம் தமிழர் வேட்பாளராக கா.மணிக்குமார் போட்டியிட்டார். நேற்று தேர்தல் முடிந்தநிலையில் இவர், தேர்தலில் தான் எவ்வளவு செலவு செய்தேன் என்பதை புள்ள விவரமாக தன்னுடைய ‘பேஸ்புக்’ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
வைப்பு தொகையாக ரூ.1,000, வேட்புமனு வகையில் ரூ.1, பத்திரம் வாங்க ரூ.20, மனு தயாரிப்பதற்காக ரூ.500, நோட்டரி பப்ளிக் கட்டணம் ரூ.500, துண்டறிக்கைக்காக ரூ. 1,950, பதாகைக்காக ரூ.300, இரு சக்கர வாகன எரிபொருளுக்கு ரூ.600, உணவிற்காக ரூ.350, தேநீருக்காக ரூ.150 உள்பட மொத்தம் ரூ.5,371 செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கா.மணிக்குமார் கூறுகையில், ‘‘பெரும்பாலும் நானும், என்னுடைய ஆதரவாளர்களும் நடந்தே பிரச்சாரத்திற்கு சென்றோம். அப்படி பக்கத்து ஊர்களுக்கு வாகனத்தில் செல்லும்போது என்னுடன் நண்பர்கள், அவர்களே வாகனத்திற்கு எரிப்பொருள் நிரப்பிக் கொள்வார்கள்.
ஓட்டலில் உணவு சாப்பிடாமல் வீட்டில் இருந்தே பிரச்சாரத்திற்கு தினமும் சாப்பாடு எடுத்து செல்வேன். என்னிடம் பெரிய பொருளாதார பின்னணி கிடையாது. வாக்கிற்கு பணம் கொடுத்தும், பிரமாண்டத்தை காட்டியும் வெற்றிப்பெற வேண்டிய அவசியம் இல்லை.
மாற்று அரசியலை மக்களிடம் முன் வைக்கிறோம். அவர்கள் வாக்களித்தால் வெற்றிப்பெறுவேன். வெற்றிப்பெறாவிட்டாலும் தொடர்ந்த மாற்று அரசியலை முன்வைப்போம். மக்களுக்காக போராடும். என்னுடைய தேர்தல் செலவில் துண்டுபிரசுரத்திற்கு மட்டுமே கூடுதல் செலவு, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT