Published : 31 Dec 2019 11:04 AM
Last Updated : 31 Dec 2019 11:04 AM
திருப்பூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக அவிநாசி, உடுமலை, குடிமங்கலம், குண்டடம், மடத்துக்குளம், பொங்கலூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு சதவீதம் 56.98ஆக இருந்தது. குறிப்பாக சின்னேரிபாளையம், நடுவச்சேரி, சேயூர், குப்பாண்டம்பாளையம், பழங்கரை, உள்ளிட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வாக்களித்தனர்.
வாக்காளர்களைக் கவரும் வகையில் வேட்பாளர்களும் தங்களது சின்னங்களை அணிந்தும், பொம்மையில் செய்யப்பட்ட சின்னங்களை காண்பித்தும் வாக்காளர்களை கவர்ந்தனர்.
வாக்குச்சீட்டு புகைப்படம்
வடுகபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் ஒருவர், தான் வாக்களித்த வாக்குச்சீட்டை அலைபேசியில் படம் எடுத்திருப்பது வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது. இதுதொடர்பாக விசாரித்தபோது, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அலைபேசியில் புகைப்படமாக எடுத்துச் சென்று காட்டினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் தரப்பில் ரூ.500 வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன.
இதுதொடர்பாக, கிராமப் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆர்.பழனிசாமி, அங்குள்ள அலுவலர்களிடம் புகைப்படத்தைக் காட்டி புகார் தெரிவித்தார். அதற்குப் பிறகு வந்த வாக்காளர்கள் அலைபேசிகளை அணைத்து வைத்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT