Published : 31 Dec 2019 09:54 AM
Last Updated : 31 Dec 2019 09:54 AM
தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி ஊராட்சி, நாலுமாவடி ஊராட்சிக்குட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் நாளை (01.01.2020) மறு வாக்குப்பதிவு நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-17, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 174, கிராம ஊராட்சி தலைவர் 403, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 2,943 என மொத்தம் 3,537 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் 1,129 பதவிகளுக்கு பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த 1,136 பதவிகளைத் தவிர 2,401 பதவிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், தூத்துக்குடி ஆழ்வார்திருநகரி ஊராட்சி, நாலுமாவடி ஊராட்சிக்குட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் நாளை (01.01.2020) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தற்போது நடத்தப்பட்டு வரும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்களில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், நாலுமாவடி ஊராட்சிக்குட்பட்ட பின்வரும் 5 வாக்குச்சாவடிகளில் 27.12.2019 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது கிராம ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களுக்கான 6 சின்னங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டில் 9 சின்னங்கள் இடம் பெற்றிருந்ததால் நாலுமாவடி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மட்டும் 01.01.2020 அன்று மறு வாக்குப்பதிவு நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடி எண் மற்றும் வாக்குச்சாவடியின் பெயர்
1. 67 அ.வா TNTDA தொடக்கப்பள்ளி, சண்முகபுரம்
2. 68 அ.வா கணேசன் மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு (கிழக்கு கட்டிடம் மேற்கு பகுதி)
3. 69 அ.வா காமாராஜர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி
4. 70 அ.வா TNTDA நடுநிலைப்பள்ளி, நாலுமாவடி - மெயின் கட்டிடம் (நடுப்பகுதி)
5. 71 அ.வா TNTDA நடுநிலைப்பள்ளி, நாலுமாவடி மெயின் கட்டிடம் (நடுப்பகுதி)
மேற்படி வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு 01.01.2020 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே, மேற்படி வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்கள் 01.01.2020 அன்று மறு வாக்குப்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வாக்காளர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை வாக்குச்சாவடிக்கு எடுத்துச் சென்று வாக்களிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மறு வாக்குப்பதிவின்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய விதிகளின்படி, வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT