Published : 31 Dec 2019 08:24 AM
Last Updated : 31 Dec 2019 08:24 AM
சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட 8 வகையான மருத்துவ உபகரணங்கள் மருந்து கட்டுப்பாட்டு வரம்புக்குள் கொண்டுவரப்படுகின்றன.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்து களும் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்கப்படுகிறது.
மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதையடுத்து, ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் பல மருத்துவ உபகரணங்களை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ கருவிகள், இதயத் துடிப்பை சீராக்கும் மின் அதிர்வு கருவி, டயாலிசிஸ் கருவிகள், எக்ஸ்ரே கருவிகள், புற்றுநோயை கண்டறியும் பிஇடி கருவி, எலும்பு மஜ்ஜை செல்களை பிரிக்கும் கருவி ஆகிய 8 உபகரணங்களை மருந்துகள் என்ற வரையறையின் கீழ் வகைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “இந்த நடவடிக்கையால் வருங்காலங்களில் விரும்பிய விலைக்கு அந்த மருத்துவ உபகரணங்களை உற்பத்தியாளர்கள் விற்பனை செய்ய முடியாது. தவறான மருத்துவ உபகரணங்கள் சந்தைக்கு வராமல் தடுக்க முடியும். பொது மக்களுக்கு மருத்துவ சேவைகளை தரமாக வழங்க முடியும். அந்த புதிய நடைமுறையானது 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT