Published : 31 Dec 2019 08:12 AM
Last Updated : 31 Dec 2019 08:12 AM
ரயில் விபத்து, தற்கொலையில் இறந்தவர்களை மீட்கும் பணியில் 30 ஆண்டுகளாக ஈடுபடும் கூலித் தொழிலாளியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் என்.செல்வராஜ் (49). வறுமை துரத்தும் குடும்ப சூழலில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிமம் இல்லாத தொழிலாளியாக பணியைத் தொடங்கினார்.
ரயில் விபத்துகளில் சிக்கி இறப்போரின் உடலையும், ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் தற்கொலை செய்து கொள்வோரின் சடலங்களை மீட்கும் பணியில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
இதுவரையில், 5,000-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளார். ஆனால், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும், ஏழ்மையில் இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான சிறப்புச் செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று வெளியானது.
இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து செல்வராஜை நேற்று பாராட்டியுள்ளார். பின்னர், அவருக்கு ரொக்கப் பரிசு வழங்கி ஊக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வராஜ் கூறும்போது, ‘‘குடும்ப சூழல் மற்றும் ஏழ்மையின் காரணமாக பள்ளிக் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை சென்ட்ரலில் உரிமம் இல்லாத தினக்கூலி அடிப்படையில் பணிக்குச் சேர்ந்தேன். ரயில்களில் தவறி விழுந்து விபத்தில் இறப்பது, தற்கொலை செய்து கொண்டோரின் உடலை மீட்பது என கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன்.
இந்தப் பணி மன நிறைவைத் தருகிறது. இருப்பினும், ரயில்வேயில் ஏதாவது ஒரு நிரந்தர வேலை கிடைத்தால் எனது குடும்பத்தின் நிலை உயரும். எனது 30 ஆண்டுகால பணி குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைத்து பாராட்டியது மகிழ்ச்சிஅளிக்கிறது. ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT