Published : 23 Aug 2015 02:06 PM
Last Updated : 23 Aug 2015 02:06 PM

15 கோடி ஆண்டுகள் பழமையான அரியவகை கல்மரங்கள் போதிய பராமரிப்பின்றி சிதிலம்: பாதுகாக்க கோரிக்கை

பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தியவை எனக் கூறப்படும் அரிய கல்மரங்கள் போதிய பராமரிப் பின்றி சிதிலமடைந்து வருகின்றன.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற் போதுள்ள நிலப்பரப்பில் சில பகுதிகள் கடல்கொள்ளப்பட்டு அவை பூமிக்கடியில் புதையுண் டன. ஆயிரக்கணக்கான ஆண்டு கள் கழித்து மீண்டும் கடல் உள் வாங்கியதால் அந்த நிலப்பரப்புகள் வெளியில் வந்தன.

நிலப்பரப்புகள் கடலுக்கடியில் புதைந்தபோது அதிலிருந்த உயிரி களும் மண்ணுக்குள் புதைந்தன. அந்தப் பகுதியில் மீண்டும் நிலப்பரப்புகள் உருவானபோது, அவைகளின் எச்சங்கள் நிலக்கரி யாகவும் கச்சா எண்ணெய்யாகவும் நமக்கு கிடைத்தன. பூக்காத தாவர வகைகள் அதிகப்படியான அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக கற்களாக உருமாறின. இவைதான் கல்மரங்கள்.

பெரம்பலூர் மாவட்டம் சாத்த னூரில் 18 மீட்டர் நீளம் கொண்ட கல்மரம் ஒன்று 1950-ல் புவியி யல் துறையால் அடையாளம் காணப்பட்டது. இதேபோல் திண்டி வனம் அருகே திருவக்கரையிலும் சிறிய கல்மரங்கள் கண்டுபிடிக் கப்பட்டன. முக்கிய புவியியல் அடையாளங்களான இந்த கல்மரங்கள் குறித்து சரியான புரிதல் இல்லாததால் இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக சிதில மடைந்து வருகின்றன.

இந்நிலையில், ’பொது நீர்’ அமைப்பினர், கல்மரங்களைப் பாதுகாப்பது குறித்து சாத்தனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களின் மக்களை ஒருங்கி ணைத்து ‘கல்மரம் காப்போம்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய ‘பொது நீர்’ அமைப்பாளர் ரமேஷ் கருப்பையா, ‘‘அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில்தான் பெரிய கல்மரங்கள் உள்ளன. இந்தியாவில் இவை அரிது. நாட்டிலுள்ள பெரிய கல்மரங்களில் சாத்தனூர் கல்மரம் முக்கியமானது. ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புவியியல் தடயத்தை ஏனோதானோ என்று வைத்துள்ளனர்.

18 மீட்டர் இருந்த கல்மரம் இப்போது 12 மீட்டராக சுருங்கி விட்டது. எஞ்சிய பகுதிகள் மக்களே எடுத்துச் சென்றுவிட்டதாகச் சொல்கிறார்கள். திருவக்கரையில் காணப்பட்ட மூன்று அடி உயர கல்மரத்தையும் இங்கே கொண்டு வந்து வைத்து இப்பகுதியை தேசிய கல்மர பூங்காவாக (National Wood Fossil Park) அறிவித்தது புவியியல் துறை. இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தபோதும் முறை யான பராமரிப்புகள் இல்லாத தால் கல்மரம் அழிந்து கொண்டி ருக்கிறது. ‘கல்மரத்தைக் கண்ணா டிக் கூண்டு போட்டு மூடினால் சாம்பலாகிவிடும்’ என்றெல்லாம் வதந்தி பரப்பியுள்ளனர்.

இனியும் இதை பாதுகாக்காமல் விட்டால் இன்னும் பத்து ஆண்டு களுக்குள் இந்த மரம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். முதல்கட்டமாக இப்பகுதி மக்க ளுக்கு இந்த மரத்தின் முக்கியத் துவத்தை உணர வைத்துள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்துப் பேசிய வரலாற் றுத் துறை பேராசிரியர் இல.தியாகராஜன், ’’கல்மரங்கள் வெள்ளக்காலத்தில் வேறு எங்கி ருந்தோ இந்தப் பகுதிக்கு அடித்து வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. திறந்தவெளி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கல்மரம், உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்றார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவிடம் இதுகுறித்து கேட்டதற்கு, ’’கல்மரம் மத்திய அரசின் ஜியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா’வின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனினும் கல்மரத்தை பாதுகாப்பது தொடர்பாக ஏற்கெனவே வந்துள்ள நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி புவியியல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x