Published : 30 Dec 2019 02:47 PM
Last Updated : 30 Dec 2019 02:47 PM
சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்டுக் கைதான பெண்களை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்புகள் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கல்லூரி மாணவிகள் சிலர் நேற்று (டிச.29) தெருக்களில் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கோலம் போட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். 'நோ என்ஆர்சி', 'நோ சிஏஏ' என்ற வாசகத்துடன் பெண்கள் கோலமிட்டனர். இதையடுத்து, கோலம் போட்ட பெண்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள மு.க.ஸ்டாலின், கனிமொழி, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் இல்லங்களில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'வேண்டாம் சிஏஏ - என்ஆர்சி' என கோலம் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெசன்ட் நகரில் கோலம் போட்டுக் கைதான பெண்கள் அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னைச் சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT