Last Updated : 30 Dec, 2019 02:22 PM

 

Published : 30 Dec 2019 02:22 PM
Last Updated : 30 Dec 2019 02:22 PM

திமுக வேட்பாளர் பெயர் வரிசை எண்ணில் மாறியதால் குழப்பம்: ஒரத்தநாடு அருகே வாக்குப்பதிவு தாமதம்

அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் திமுக ஒன்றியக் கழகச் செயலாளர் காந்தி உள்ளிட்டோர்.

தஞ்சை

ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் ஊராட்சியில் திமுக வேட்பாளர் பெயர், வரிசை எண்ணில் மாறி இருந்ததால் வாக்குப்பதிவு இரண்டரை மணிநேரம் தாமதமானது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு உட்பட்ட 15-வது வார்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கான தேர்தல் ஒக்கநாடு கீழையூர் மற்றும் கவராபட்டு ஊராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று (டிச.30) காலை 7 மணியளவில் தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தபோது, வாக்குச்சாவடிக்கு வெளியே தேர்தல் அதிகாரிகளால் வைக்கப்பட்டிருந்த அரசுத்தரப்பு விளம்பரச் சுவரொட்டியில், திமுக சார்பாக போட்டியிட்ட கலைச்செல்வி பாரத் என்ற வேட்பாளரின் பெயர், வரிசையின் நான்காவது இடத்தில் இருந்தது.

ஆனால், வாக்குச் சீட்டில் இந்த வேட்பாளரின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது. இதனால் குழப்பமடைந்த வாக்காளர்களும் திமுக வேட்பாளரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வாக்காளர்களும் வேட்பாளரும் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். இச்சம்பவத்தால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறித்த ஒரத்தநாடு டிஎஸ்பி செங்கமல கண்ணன், ஒரத்தநாடு ஒன்றிய ஆணையர் விஜய், தாசில்தார் அருள்ராஜ் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்திருந்த திமுக முன்னாள் ஒன்றியக் குழு தலைவரும், திமுக ஒன்றியக் கழகச் செயலாளருமான காந்தி வாக்குச்சாவடிக்கு வந்து விவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் திமுகவின் மாவட்டக் கழகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக ஒரத்தநாடு எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், உதவி கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சங்கர், தஞ்சாவூர் ஆர்டிஓ வேலுமணி ஆகியோர் வாக்குச்சாவடிக்கு விரைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் ஒக்கநாடு கீழையூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசால் வழக்கமாக தமிழ் அகர வரிசைப்படி தான் வேட்பாளர்களின் பெயர் தேர்தல் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு அது சுவரொட்டிகளாக ஒட்டப்படும். வாக்குச்சீட்டில் எந்த மாதிரியான வரிசையில் இருக்கிறதோ, அதே வரிசையில்தான் அரசு மூலமாக வெளிப்பகுதியில் விளம்பரம் செய்யப்படும் சுவரொட்டிகளிலும் இருக்கும் என்பது தேர்தல் விதிமுறை ஆகும். ஆனால் வாக்குச் சீட்டில் வேறு மாதிரியும் வெளிப்புறம் விளம்பரம் செய்யப்பட்ட சுவரொட்டியில் வேறு மாதிரியும் இருந்ததால் தேர்தல் அதிகாரிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த ஒன்றியக்குழு தேர்தலில் அமமுகவின் சார்பாக கமலக்கண்ணி என்ற வேட்பாளரும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தனலட்சுமி என்ற வேட்பாளரும் ஆளும் கட்சியான அதிமுக சார்பாக மலர் வேணி சுவாமிநாதன் என்பவரும் திமுக சார்பாக கலைச்செல்வி பாரத் என்ற வேட்பாளரும் களத்தில் உள்ளனர். மொத்தத்தில் நான்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த வாக்குச்சாவடிகள், ஒக்கநாடு கீழையூர் ஐந்தும் காவராபட்டில் மூன்றும் என மொத்தத்தில் எட்டு வாக்குச்சாவடிகள் இந்த ஒன்றியக்குழு தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 4,000 வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டிய வாக்குச்சாவடிகளில் இரண்டரை மணிநேரம் எந்த வாக்கும் பதிவாகாமல் இருந்தது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளும் மற்ற வேட்பாளர்களும் காவல்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வாக்குச்சாவடியில் வெளியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, வேறு சுவரொட்டி சரியாக ஒட்டப்பட்டு இரண்டரை மணிநேரத்திற்குப் பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருப்பதற்காக தேர்தல் அதிகாரிகளும் போலீஸாரும் முகாமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x