Published : 30 Dec 2019 09:51 AM
Last Updated : 30 Dec 2019 09:51 AM

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.1,188 கோடியில் 6 வழிச்சாலையாக விரிவாக்கம்

பெரும்புதூர்

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையான 70 கிமீ தூரம் உள்ள 4 வழிச்சாலை, ரூ.1,188 கோடியில், 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னை - பெங்களூரு இடையே உள்ள 4 வழிச்சாலை, 6 வழிச்சாலையாக (௭க்ஸ்ப்ரஸ்-ஹைவே) மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்துக்காக மொத்தம் 2,600 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1,000 ஹெக்டேர் நிலம் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரை சுமார் 70 கிமீ தூரம், 2 கட்டங்களாக ரூ.1,188 கோடி மதிப்பில், 6 வழிப்பாதையாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ௭க்ஸ்பிரஸ்-ஹைவே சாலையில் மொத்தம், 32 பாலங்கள் கட்டப்பட உள்ளன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை - பெங்களூரு இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, புதிதாக விரைவுச் சாலை (எக்ஸ்ப்ரஸ்-ஹைவே) அமைக்கப்படும் என, கடந்த, 2018-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூர் - சுங்கச்சாவடி முதல், வாலாஜாபேட்டை வரை உள்ள 4 வழிப்பாதை, 6 வழிப்பாதையாக மாற்றப்படவுள்ளது. இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தல் பணிகள் முடிந்துவிட்டன.

தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கியுள்ளன. முக்கிய சந்திப்புகளில் பாலங்கள் அமைக்கப்படும் திட்டத்தின்கீழ், ஸ்ரீபெரும்புதூரில் 2 கிமீ நீளத்துக்கு மேம்பாலம் அமையவுள்ளது. 2 ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x