Published : 30 Dec 2019 09:49 AM
Last Updated : 30 Dec 2019 09:49 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப் பெட்டிக்கு தீ வைப்பு எதிரொலி: 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்பு 2 மடங்காக அதிகரிப்பு

சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2-ம் கட்ட வாக்குப் பதிவுக்காக, சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பும் அதிகாரிகள்.

திருவள்ளூர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் 2 மடங்கு போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அப்போது, கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் 84-ம் எண் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்டோர் வாக்குச் சாவடியின் உள்ளே புகுந்து சூறையாடியதோடு, வாக்குப் பெட்டியை வாக்குச் சாவடிக்கு வெளியே தூக்கி வந்து, பதிவான வாக்குகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து, 84, 83 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்த மணவாள நகர் போலீஸார், பாப்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 பேரை கைது செய்தனர். அதில், பரந்தாமன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இச்சூழலில், பாப்பரம்பாக்கம் 84, 83 எண்கள் கொண்ட இரு வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப் பதிவும் புழல், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், வில்லிவாக்கம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,174 வாக்குச் சாவடிகளில் 2-ம் கட்ட வாக்குப் பதிவும் இன்று நடைபெற உள்ளது.

பாப்பரம்பாக்கம் சம்பவம் எதிரொலியாக, 2-ம் கட்ட வாக்குப் பதிவு பாதுகாப்பு பணிக்கு, ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த போலீஸாரின் எண்ணிக்கையை இரு மடங்காக, அதாவது 1,800-ல் இருந்து 3,611 ஆக மாவட்ட நிர்வாகம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 5 ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள், 30 முன்னாள் ராணுவத்தினர், 915 ஊர் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், பதற்றமான, மிகவும் பதற்றமான 257 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 71 வாக்குச் சாவடிகளில் நுண் பார்வையாளர்கள், 66 வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள், 120 வாக்குச் சாவடிகளில் வீடியோ கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதுமட்டுமல்லாமல், 119 இடங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட உள்ளன.

வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் தவிர வேறு நபர்கள் கூடக் கூடாது எனவும், வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x