Published : 06 Aug 2015 12:44 PM
Last Updated : 06 Aug 2015 12:44 PM

கொடைக்கானல் கலக்கம்: சென்னை பாப் பாடலுக்கு பணிந்த யூனிலீவர்

கொடைக்கானலில் உள்ள தெர்மாமீட்டர் ஆலையில் இருந்து பாதரச கழிவை அப்புறப்படுத்த யூனிலீவர் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்பிரச்சினையை முன்வைத்து இணையத்தில் வெளியான 2 நிமிடம் ஓடும் சென்னை பாப் பாடகியின் பாடலின் எதிரொலியாகவே, யூனிலீவர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1983-ம் ஆண்டு கொடைக்கானலில் 'பாண்ட்ஸ் இந்தியா' (பின்னாளில் அது ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்துடன் இணைந்தது) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தெர்மாமீட்டர் உற்பத்தி நிறுவனத்தில், அதிக அளவு பாதரசம் பயன்படுத்தப்பட்டது. முறையான பாதுகாப்புடன் அது கையாளப்படாததால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கிருக்கும் மக்களை உருக்குலைத்துவருகிறது.

இப்படி வெளியான பாதரசம், அங்குள்ள மக்களுக்கு இரண்டு வகைகளில் தீங்கிழைத்துவருகிறது. மேற்கண்ட நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர், அவர்களுடைய குடும்பத்தினர் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டனர்.

கொடைக்கானலில் இன்றைக்கு 25 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கிராமங்களில் உள்ள முன்னாள் பாதரசப் பணியாளர்களின் குடும்பங்களில் 120 பெண்களுக்கு மகப்பேறு தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. சுமார் 60 குடும்பங்கள் குழந்தை இல்லாமல் இருக்கின்றன.

இந்நிலையில், இந்தப் பிரச்சினையெல்லாம் எடுத்துக் கூறி நியாயம் கேட்கும் வகையில் 'கொடைக்கானல் வோன்ட்' என்ற ராப் இசைப் பாடல் உருவாக்கப்பட்டது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலானது. | தொடர்புடைய செய்தி:>யூடியூப் பகிர்வு: கொடைக்கானல் 'கலக்கத்தை' பரப்பும் பெண்! |

இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள தெர்மாமீட்டர் ஆலையில் இருந்து பாதரச கழிவை அப்புறப்படுத்த யூனிலீவர் நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதே வேளையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் யுனிலீவர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "யூனிலீவர் தெர்மாமீட்டர் ஆலையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களுக்கு எவ்வித உடல்நலன் பாதிப்பும் ஏற்படவில்லை. இதை பல்வேறு நிபுணர் ஆய்வு அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவும் இதனை உறுதி செய்திருக்கிறது. மேலும், கொடைக்கானல் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நிபுணர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "கடந்த 2009-ம் ஆண்டே யூனிலீவர் நிறுவனம் கழிவுகளை சுத்தப்படுத்துவதற்கான முன் முயற்சிகளை எடுத்தது. ஆனால், அப்போது சில என்.ஜி.ஓ., அமைப்புகள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகள் ஏற்புடையதல்ல என தெரிவித்தனர். அதன் காரணமாகவே பணிகள் தடைபட்டன" என நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு:

இருப்பினும், யூனிலீவர் நிறுவனத்தின் அறிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் கூறும்போது, "யூனிலீவர் அறிக்கை பொறுப்பற்றதாகவும், முக்கியமான உண்மைகளை மறைப்பதாகவும் இருக்கிறது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் சார்பில் அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை யூனிலீவர் நிறுவனம் மறைத்துள்ளது. மத்திய அரசின் அறிக்கையில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் பாதரச கழிவால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது" என்றார்.

தொடர்புடைய வீடியோ பதிவு: