Published : 30 Dec 2019 08:15 AM
Last Updated : 30 Dec 2019 08:15 AM

பல்வேறு ரயில் விபத்துகள், தற்கொலை சம்பவங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை மீட்ட தொழிலாளி: வறுமையோடு 30 ஆண்டுகளாக தொடரும் பணி


சென்னை

கி.ஜெயப்பிரகாஷ்

ரயில் விபத்துகள் மற்றும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற சம்பவங்களில் உயிரிழந்தோரின் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை மீட்டவர் சென்னையைச் சேர்ந்த செல்வராஜ். வறுமை நிலையிலும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(49). இவருக்கு 15 வயதாக இருக்கும்போதே, இவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். குடும்ப வறுமையால், தனது பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்து விட்டு, சென்னை சென்ட்ரலில் உரிமம் இல்லாத சுமைதூக்குபவராக (கூலி) தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

தற்போது, ரயில் விபத்துகளில் சிக்கி இறப்போரின் உடல்களையும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோரின் உடல்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு தொடங்கி சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் பணியை செய்து வருகிறார். இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளார். ஆனால், ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலுக்கான அங்கீகாரம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று மன வருத்தத்துடன் கூறுகிறார் செல்வராஜ்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் மேலும் கூறியதாவது:

8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நான், குடும்ப வறுமை காரணமாக எனது படிப்பை பாதியில் நிறுத்துவிட்டு சென்னை சென்ட்ரலில் உரிமம் இல்லாத சுமைதூக்குபவராக பணிக்கு சேர்ந்தேன். ரயில்களில் தவறி விழுந்த விபத்தில் இறப்பவர்கள் மற்றும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டோரின் உடலை மீட்க தினக் கூலி அடிப்படையில் பணியாற்றி வருகிறேன்.

ஆரம்ப காலத்தில் இறந்தவர்களின் உடலைச் சேகரிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டேன். உடலைப் பார்க்கும்போது மயக்கம்கூட ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் விபத்தில் சிக்கியவர்களின் உடல் உறுப்புகள் ஆங்காங்கே தனித் தனியாக சிதறிக் கிடக்கும். அவற்றைக் காணும்போது மனம் மிகவும் வேதனைப்படும். சமீபகாலமாக செல்போன் பயன்படுத்திக் கொண்டே தண்டவாளம் கடப்பது, ரயில்களின் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதில் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மறக்க முடியாத சம்பவம்

கடந்த 30 ஆண்டுகளாக இரவு, பகல் பாராமல் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளேன். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு மே 1-ம் தேதி சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. அன்று காலை நாங்கள் பணியில் இருக்கும்போது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது. நாங்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்டோம். இந்த சம்பவத்தில் ஸ்வாதி என்ற பெண்ணை மீட்கும் பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டோம். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. இதில், நான் சிறப்பாக பணியாற்றியதற்காக அப்போதைய தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

நிரந்தர வேலை வேண்டும்

எனக்கு தற்போது 50 வயது நெருங்கி விட்டது. நிரந்தர வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். தெற்கு ரயில்வேயில் ஏதாவது ஒரு சாதாரண வேலையை கருணை அடிப்படையில் வழங்க வேண்டுமென ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

குறைந்தபட்ச வருமானத்தை உறுதிசெய்யும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுமைதூக்குபவராக பணியாற்றவாவது அங்கீகாரம் அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘செல்வராஜின் பணிகள் தொடர்பாக ஆவணங்கள் மற்றும் அவரது கோரிக்கை குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x