Published : 13 Aug 2015 03:26 PM
Last Updated : 13 Aug 2015 03:26 PM

திருப்பூரில் வீதியெங்கும் மலைபோல் தேங்கும் குப்பை

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட இடம் தேடி வருவதால், கடந்த சில நாட்களாக வீதியெங்கும் குப்பை தேங்கத் தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக குப்பை அள்ளப்படாததால், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் மலைபோல் குப்பை தேங்கத் தொடங்கியுள்ளது. இதனால், அனைத்துப் பகுதிகளிலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

60 வார்டு குப்பைகளும், காளம்பாளையம் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அப்பகுதியில் குப்பை கொட்டுவது கடந்த சில வாரங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. பின், காங்கயம் சாலையில் உள்ள ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள பாறைக்குழியில் கொட்டப்பட்டது. அங்குள்ளவர்கள், பசுமைத் தீர்ப்பாய நீதிமன்றத்தில் தடையாணை பெற்றதையடுத்து, அங்கும் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த 10 நாட்களாக குப்பை அள்ளப்படாமல், வீதிக்கு வீதி தேங்கி உள்ளது. தற்போது பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

தமிழகத்தின் ஏராளமான பின்னலாடைத் தொழிற்சாலைகள் உள்ள நகரம் இது. அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டித்தரும், சுமார் 10 லட்சம் பேர் வசிக்கும் மாநகராட்சியில், குப்பை கொட்டுவதற்கு ஒரு நிரந்தர இடமில்லாமல் மாநகராட்சி நிர்வாகம் அல்லாடுவது மிகவும் வேதனையளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். வீட்டுக்குப்பை, கம்பெனி குப்பை, எம்பிராய்டரி குப்பை, தேநீர்க் கடைக் கழிவுகள், உணவகம், இறைச்சிக் கழிவுகள் என நாளுக்கு நாள் டன் கணக்கில் குப்பை தேங்கி வருகிறது.

இது குறித்து 12-வது வார்டு கவுன்சிலர் எஸ்.ரவிச்சந்திரன் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் பற்றி, கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சிக் கூட்டத்தில் பேசுகிறோம். தீர்மானம் நிறைவேற்றுகிறோம். ஆனால், மாநில அரசிடம் பேசி, திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான நிதியை கேட்டுப் பெறுவதில்லை. தற்போது ஆளுங்கட்சி பெரும்பான்மையாக உள்ள திருப்பூர் மாநகராட்சியில், பொதுமக்களுக்கு பயன்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான நிதியை உடனடியாக கேட்டுப் பெற வேண்டும். ஏற்கெனவே டெங்கு உள்ளிட்ட நோய்ப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் மக்கள் தற்போது, சுகாதாரப் பிரச்சினையை சந்தித்திருப்பது, பெரும் துயரம் என்றார்.

அதிமுக மூத்த கவுன்சிலர்

1986-ம் ஆண்டு முதல் தற்போது வரை கவுன்சிலராக இருக்கும், அதிமுகவைச் சேர்ந்த முருகசாமி கூறியதாவது: இடுவாயில் மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

பின், இதே திட்டத்தை கோயில்வழி பகுதியில் மாற்றினார்கள். தற்போது சுமார் 100 கோடி செலவாகும் என மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் போன்ற தொழில்நகரத்தில் வீடுகள் அதிகரித்து வருவதால், குப்பை கொட்ட இடம் தேட வேண்டியிருக்கிறது.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், திருப்பூரில் உடனடியாக செய்யக்கூடிய செயல் அல்ல. குப்பை கொட்டுவது, மண் போடுவது, மருந்து தெளிப்பது என தொடர்ச்சியான சுகாதாரப் பணிகள் மூலம், குப்பை கொட்டும் பகுதியில் வாழும் மக்களின் மனதில், நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்றார்.

சுகாதாரத்துறை ஆய்வு

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘காங்கயம் சாலையில் கொட்டப்பட்டு வந்த இடத்தில், அங்குள்ளவர்கள் பெற்ற நீதிமன்ற தடையாணையை எதிர்த்து மாநகராட்சி நிர்வாகம் முறையிட உள்ளது.

அதேசமயம், ஒவ்வொரு மண்டலத்திலும் குப்பை கொட்டுவதற்காக இடம்தேடும் பணி வெகு தீவிரமாக நடைபெறுகிறது. காங்கயம், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி சாலைகளில் உள்ள பயன்படுத்தப்படாத பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டவும் ஆய்வு செய்து வருகிறோம்’ என்றனர்.

‘ஒன்றரை ஆண்டு ஆகும்’

மாநகராட்சி ஆணையர் அசோகன் கூறும்போது, ‘பொதுமக்கள் யாரும் இல்லாத பகுதியை தேர்வு செய்துதான், காங்கயம் சாலையில் குப்பை கொட்டி வந்தோம். ஆனால், அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளனர். திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் திருப்பூரில் நிறைவேற, சுமார் ஒன்றரை வருடம் ஆகும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x