Published : 29 Dec 2019 07:56 AM
Last Updated : 29 Dec 2019 07:56 AM
காலதாமதம் மற்றும் அலைச்சலைத் தவிர்க்க சொத்தை விற்பவர், தான் சார்ந்த பதிவு மாவட்டத்தில் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் திட்டம் தொடர்பாக தமிழக அரசின் அனுமதிக்கு பதிவுத் துறை காத்திருக்கிறது.
தமிழக அரசின் பதிவுத் துறை தற்போது முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் வாயிலாக பத்திர விவரங்கள் பதிவு செய்து, பதிவு நேரத்தையும் உறுதி செய்து, உரிய நேரத்தில் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன.
இந்தத் திட்டத்தை பொதுமக்கள் வரவேற்ற போதிலும், சொத்து உள்ள பகுதிக்கான அதிகார வரம்பை கொண்ட சார்பதிவாளர் அலுவலகத்திலேயே பதிவு செய்ய வேண்டியுள்ளது. இல்லையெனில், மாவட்டப் பதிவாளர், மண்டலப் பதிவாளர் அலுவலகங்களை நாட வேண்டும்.
இதனால் சிலநேரங்களில், சொத்து உரிமையாளரும், வாங்குபவரும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நீண்ட தொலைவிலிருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியில், சார்பதிவாளர் அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு, வலைதள இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இனியும் இதுபோன்ற அலைச்சல்கள் தேவைதானா என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையில், பத்திரப்பதிவின் எண்ணிக்கை குறைவால், தமிழக அரசுக்கு வருவாயும் குறைந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவு நடைமுறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர தமிழக பதிவுத் துறை திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, ஒரு பதிவு மாவட்டத்துக்குள் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் எந்த அலுவலகத்தில் வேண்டுமானாலும் அந்த மாவட்டத்துக்குள் உள்ள சொத்துகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர முடிவெடுத்து, இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து, பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது உருவாக்கப்பட்ட மாவட்டங்களையும் சேர்த்து 37 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. அதேநேரம், பதிவுத் துறை நிர்வாக வசதிக்காக 50 பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு பதிவு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்கான பதிவை வேறு மாவட்டத்தில் மேற்கொள்ள முடியாது.
அதேநேரம், சென்னை மண்டலத்தில் உள்ள பகுதிகளின் சொத்துகளை தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை வடக்கு மாவட்ட பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும். இதுதவிர, பதிவுத் துறை தலைவர் அலுவலகத்திலும் பதிவுசெய்ய முடியும். மேலும், ஒரு பதிவு மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலக அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளின் பதிவுகளை மாவட்டத் தலைமை பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், தற்போது ஒரு பதிவு மாவட்டத்துக்குள் தாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் எந்த சார்பதிவாளர் அலுவலகம் உள்ளதோ அதில் அவர்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த பதிவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சார்பதிவாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும். இதுதொடர்பான பரிந்துரை பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசும் பரிசீலித்து வருகிறது. விரைவில் பதிவுத் துறை சட்டத்தில் இதற்கான திருத்தம் செய்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
தற்போது சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துகளுக்கான பதிவை, மாவட்டத் தலைமை பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளும் வசதியுள்ளது. பதிவுத் துறையின் புதிய திட்டமானது, பொதுமக்களின் அலைச்சலை குறைப்பதோடு, சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூட்ட நெரிசல் இல்லாமல் பதிவு மேற்கொள்ளப்படும் என்பதால் நேரமும் மிச்சமாகும். அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT