Published : 28 Dec 2019 05:31 PM
Last Updated : 28 Dec 2019 05:31 PM
விசாரணைக்கு அழைத்து வருபவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தை நேய அறை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வண்ண மயமான பட்டாம்பூச்சிகள், துள்ளி விளையாட எத்தனிக்கும் சோட்டா பீம், தாவக் காத்திருக்கும் ஸ்பைடர் மேன் என சுவர்களை ஏராளமான, அழகிய படங்கள் அலங்கரிக்கின்றன.
கண்ணை உறுத்தாத நிறங்களில் கரடி பொம்மைகள், மணிகள் ஆகியவையும் வாங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே மெத்தென்ற தரை விரிப்புகளும் குழந்தைகள் படுக்கப் போடப்பட்டுள்ளன. இதனால் குட்டி மழலையர் பள்ளியாகவே காட்சியளிக்கிறது குழந்தை நேய அறை. இது காவல் நிலைய அறை என்பதையும் மறக்கடித்து விடுகிறது.
மகளிர் காவல் நிலையம் என்பதால் விசாரணைக்கு அழைத்து வரப்படும் பெண்களின் குழந்தைகள் மனநிலையில் பயமோ, பாதுகாப்பற்ற உணர்வோ ஏற்படாமல் தடுக்க, இந்த குழந்தை நேய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல பச்சிளங் குழந்தைகளின் தாய்மார்கள் பாலூட்ட வசதியாக தனி அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், ''அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் இதேபோன்ற சிறப்புப் பகுதிகள் அமைக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT