Published : 28 Dec 2019 02:21 PM
Last Updated : 28 Dec 2019 02:21 PM

24 மணி நேர சிசிடிவி கண்காணிப்புடன் 3 அடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள்: மதுரை ஆட்சியர் தகவல்

மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் (வலது); தேர்தல் பார்வையாளர் என்.சுப்பையன் (இடது)

மதுரையில் நேற்று (டிச.27) நடைபெற்ற முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஆட்சியர் முன்னிலையில் பத்திரப்படுத்தப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றிங்களில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்கு 181 பேர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு 1,555 பேர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,467 பேர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 8,169 பேர் போட்டியிட்டனர். மதுரையில் முதல் கட்ட தேர்தலில் 77.14 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய் மற்றும் தேர்தல் பார்வையாளர் என்.சுப்பையன் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட்டன. வாக்குப்பெட்டிகளை பத்திரப்படுத்தியதற்கான ஆவணத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். ஸ்ட்ராங் ரூமுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் வினய் அளித்த பேட்டியில், "ஊரகப் பகுதிக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று மதுரையில் 6 ஒன்றியங்களில் நடைபெற்றது. சிறுசிறு சச்சரவுகளைத் தவிர வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

வாக்குப்பெட்டிகள் 6 ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் சீலிடப்பட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சிசிடிவி கேமரா பதிவுகள் தெரியும் மானிட்டர் அறையில் போலீஸாருடன் அந்தந்த கட்சி ஏஜென்டுகளும் இருக்க அனுமதிக்கப்படுகிறது.

அடுத்தகட்டமாக எஞ்சியுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் ஆயத்தம் குறித்து ஆலோசனை நடைபெறவிருக்கிறது. அடுத்தகட்ட தேர்தலையும் சுமுகமாக நடத்த ஆயத்தமாகி வருகிறோம் என்று கூறினார்.

வாக்குகள் எண்ணப்படுவது எப்படி?

ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகள் அளித்துள்ளதால் எந்த முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என நிருபர்கள் கேள்வி எழுப்ப, "முதலில் ஓர் அறையில் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் கொட்டப்பட்டு பதவிகள் வாரியாகப் பிரிக்கப்படும். பின்னர் 4 வெவ்வேறு அறைகளில் வாக்குச்சீட்டுகள் எண்ணப்படும்" என விளக்கினார்.

வாக்குச்சீட்டுகளைப் பிரிக்கும் அறையிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டாம்பட்டியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு?

மதுரையில் பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்த நிலையில் கொட்டாம்பட்டியில் மற்றும் சிறு சந்தேகம் இருப்பதாகக் கூறிய ஆட்சியர், "கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சென்னகரம்பட்டியில் 9-வது வார்டு கிராம ஊராட்சியில் சுந்தரேசன் என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இக்கிராமத்தில் உள்ள 144-வது வாக்குச்சாவடியில் 8 மற்றும் 9-வது வார்டு வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 9-வது வார்டுக்கு ஏற்கெனவே சுந்தரேசன் என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.

இதனால், இந்த வார்டு வாக்காளர்களுக்கு மூன்று வாக்குச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. அதே நேரம் 8-வது வார்டு வாக்காளர்களுக்கு கிராம் ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டை மாற்றி, 9-வது வார்டுக்கான சீட்டினை வழங்கிவிட்டனர். இந்த வாக்குச்சீட்டுகளைவைத்து 92 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர். 93-வது வாக்காளர் சுட்டிக்காடிய பின்னரே தேர்தல் அதிகாரிகள் செய்த இந்த குழப்பம் அம்பலமானது.

இதனையடுத்து இது தொடர்பான தேர்தல் அறிக்கை மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் அத்தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x