Published : 28 Dec 2019 02:16 PM
Last Updated : 28 Dec 2019 02:16 PM

கோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

கோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.28) வெளியிட்ட அறிக்கையில், "கோவை, துடியலூரை அடுத்த பன்னிமடையில், கடந்த மார்ச் மாதத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளிக்கு மரண தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும், இந்த கொடூரச் சம்பவத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக டிஎன்ஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி மேல் விசாரணை நடத்திட வேண்டுமெனவும் கோவை, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

இவ்வழக்கில் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைப்பதற்காக உறுதியாக போராடிய குழந்தையின் பெற்றோர்களுக்கும், ஆரம்பம் முதலே பல கட்ட போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்திய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினருக்கும், குறுகிய காலத்தில் இவ்வழக்கினை புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. சிறுமிக்கு நீதி கிடைப்பதற்காக பல்வேறு இயக்கங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து சமூகத்தில் அச்சம் பரவி வரும் சூழ்நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.

மேலும் இவ்வழக்கில் மற்றொருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளதால் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி அந்த குற்றவாளிக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறோம்.

இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தருவதும், இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் சமூக அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் முனைப்புடன் செயல்படுவதும் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை கொடுமைகளிலிருந்து பெண்கள் - குழந்தைகளை பாதுகாத்திட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x