Published : 28 Dec 2019 01:31 PM
Last Updated : 28 Dec 2019 01:31 PM
நல்லாட்சிக் குறியீட்டில் முதலிடம் பெற்ற தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (டிச.28) வெளியிட்ட அறிக்கையில், "மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கான குறியீடுகளில் இந்தியாவின் 18 பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகாக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய நல்லாட்சி நாளையொட்டி நல்லாட்சி குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களை தரவரிசைப்படுத்தும் வழக்கத்தை மத்திய அரசு நடப்பாண்டில் தொடங்கியுள்ளது. வேளாண்மை, தொழில் மற்றும் வணிகம், மனிதவளம், பொது சுகாதாரம், பொது உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், பொருளாதார நிர்வாகம், சமூக நலம் மற்றும் மேம்பாடு, நீதி மற்றும் பொதுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல், குடிமக்கள் சார்ந்த நிர்வாகம் ஆகிய 10 துறைகளில் 18 பெரிய மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவை சார்ந்த 50 காரணிகளின் அடிப்படையில் நல்லாட்சிக் குறியீடுகள் மதிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றில் பொது உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள், நீதி மற்றும் பொதுப்பாதுகாப்பு ஆகிய இரு துறைகளில் தமிழகம் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவை தவிர்த்து பொதுசுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. மனிதவள மேம்பாடு, பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றில் 5 ஆவது இடம் கிடைத்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாக 10 துறைகளிலும் சேர்த்து பத்துக்கு 5.62 மதிப்பெண் பெற்று நல்லாட்சிக்கான குறியீட்டு தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது. பொதுமக்களின் நலனுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் தேவையான துறைகளில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டிருப்பதை இது உறுதி செய்கிறது. விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கான வேளாண்துறையில் 9 ஆவது இடத்தையும், தொழில் மற்றும் வணிகத்தில் 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ள தமிழ்நாடு, அந்த துறைகளிலும் முன்னேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, உள்ளாட்சித் துறையில் சிறந்த செயல்பாடுகளுக்காக நடப்பாண்டில் 13 விருதுகள் உள்ளிட்ட 99 விருதுகளை தமிழக அரசு இதுவரை வென்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக கிருஷி கர்மான் விருதுகளையும் தமிழக அரசு தொடர்ந்து வென்றெடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசின் சாதனைகளும், வெற்றிகளும் தொடர்வதற்கு வாழ்த்துகிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT