Published : 28 Dec 2019 09:16 AM
Last Updated : 28 Dec 2019 09:16 AM

திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச்சாவடி சூறை; வாக்குப் பெட்டிக்கு தீ வைப்பு

திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் சூறையாடப்பட்ட வாக்குச் சாவடி. படம்: பு.க.பிரவீன்

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டு, வாக்குப் பெட்டிக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 8 ஊராட்சி ஒன்றியங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றான கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியின் தலைவர் பதவி, எஸ்.சி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் ஜெயந்தி, சித்ரா, சத்தியா ஆகிய 3 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

அதே போல், பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய திருவள்ளூர் மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் சசிகுமார், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளர் தினேஷ்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பசுபதி மற்றும் சுயேச்சை வேட்பாளர் விநோத்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த சாந்தி, பாமகவைச் சேர்ந்த செண்பகவள்ளி, தேமுகதிகவைச் சேர்ந்த தரணி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பாப்பரம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 83, 84, 85 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச் சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல், வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1,180 வாக்காளர்கள் கொண்ட இந்த 3 வாக்குச் சாவடிகளிலும், பகல் 12 மணியளவில் சுமார் 600 வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில் 12 மணிக்குப் பிறகு 50-க்கும் மேற்பட்ட கும்பல் 84 எண் கொண்ட வாக்குச்சாவடியினுள் புகுந்து, கள்ள ஓட்டுப் போடப்படுவதாகக் கூறி, வாக்குச்சாவடியில் ஆவணங்கள், இருக்கைகள் உள்ளிட்டவற்றை சூறையாடினர், இதைத் தொடர்ந்து, அங்குள்ள வாக்குப் பெட்டியை வாக்குச்சாவடிக்கு வெளியே தூக்கி வந்து, பதிவான வாக்குகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து, 3 வாக்குச் சாவடிகளிலும் உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன், திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவர்கள், 84, 83 ஆகிய எண்கள் கொண்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை தொடர்ந்து நிறுத்தவும், 85 எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை தொடரவும் உத்தரவிட்டனர்.

ஆனால், 3 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை தொடரக் கூடாது எனக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிகள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, அவர்களை போலீஸார் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

தொடர்ந்து, 2 மணி நேரத்துக்குப் பிறகு எண் 85 வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கியது.

மேலும், வாக்குச் சாவடி சூறையாடல், வாக்குப்பெட்டி தீ வைப்பு சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியின் உத்தரவின்பேரில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x