Published : 27 Dec 2019 05:15 PM
Last Updated : 27 Dec 2019 05:15 PM
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களில் மதியம் 3 மணியளவில் பதிவான வாக்குகள் நிலவரம் பின்வருமாறு:
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது.
மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
மதுரையில் 58.53%..
மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 6 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றன. மதியம் 3 மணி நிலவரப்படி மதுரையில் 58.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. திருமோகூரில் வேட்பாளர்களுக்கு இடையே வாக்குவாதம், ஒத்தக்கடையில் வாக்குச்சாவடிக்குள்ளேயே வாக்கு சேகரித்ததாக எழுந்த சர்ச்சை தவிர வேறு பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை.
திண்டுக்கல்லில் 58.51%
திண்டுக்கல்லில் மதியம் 3 மணி நிலவரப்படி 58.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. திண்டுக்கல்லில் சாணார்பட்டியில் 7 வேட்பாளர்களில் ஒரு வேட்பாளரின் சின்னம் மட்டும் வாக்குச்சீட்டில் இடம்பெறாததால் சிக்கல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது.
தேனியில் 62%..
மதியம் 3 மணி நிலவரப்படி தேனியில் 62% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் கடமலை - மயிலாடும்பாறை ஒன்றியப் பகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த இரு ஒன்றியங்களிலும் 3 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 33 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் , 48 ஊராட்சித் தலைவர் பதவி, 417 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி என 501 பதவிகள் உள்ளன. இதில் 139 பதவிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று 362 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் சுமுகமாகவே தேர்தல் நடைபெற்று முடிந்தது.
விருதுநகரில் 52%..
மதியம் 3 மணி நிலவரப்படி விருதுநகரில் 52% வாக்குகள் பதிவாகியுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதற்கட்டமாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
விருதுநகரில் காலை முதலே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. விருதுநகர் மகாராஜபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் வாக்குப்பதிவு செய்யும் பெட்டியை மூடியிருக்கும் அட்டையில் 'நகர்மன்ற உறுப்பினர் வாக்களிக்கும் இடம்' என்று எழுதப்பட்டிருந்ததால் மக்கள் குழப்பமடைந்தனர். பின்னர், ஆட்சியர் கண்ணன் உத்தரவின்படி அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதால் சர்ச்சை தீர்ந்தது.
தூத்துக்குடியில் 55.26%..
மதியம் 3 மணி நிலவரப்படி தூத்துக்குடியில் 55.26% வாக்குகள் பதிவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் 6 ஓட்டுகள் மட்டுமே பதிவானது.
ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். அதுபோல சாத்தான்குளம் ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சியில் 6-வது வார்டு பகுதி மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர். பகுதிநேர நியாயவிலைக் கடை கோரி தேர்தல் புறக்கணிப்பை இக்கிராம மக்கள் வெளியிட்டனர்.
ராமநாதபுரத்தில் 55.51%..
மதியம் 3 மணி நிலவரப்படி ராமநாதபுரத்தில் 55.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாயாகுளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இரண்டு பூத்களிலும் தலா 950, 730 வாக்குகள் இருந்த நிலையில் ஒருவர்கூட வாக்களிக்கவில்லை.
சிவகங்கையில் 62.40%..
மதியம் 3 மணி நிலவரப்படி சிவகங்கையில் 62.40% வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவகங்கையில் வாக்குச்சாவடிக்குள்ளேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிவகங்கை அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நிருபர்கள்: கி.மகாராஜன், பி.டி.ரவிச்சந்திரன், என்.கணேஷ்ராஜ், இ.மணிகண்டன், ரெ.ஜாய்சன், கி.தனபாலன், இ.ஜெகநாதன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment