Published : 27 Dec 2019 03:14 PM
Last Updated : 27 Dec 2019 03:14 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திரண்ட மக்கள் புரட்சி: ப.சிதம்பரம் பெருமிதம்

சென்னை

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு 15 நாளில் ஒரு பெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ளனர். 15 நாளில் இந்த புரட்சியை காணமுடிகிறது என்றால் கண்டிப்பாக மக்களை நம்பி எவ்வளவு பெரிய புரட்சியிலும் இறங்கலாம் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை எனும் கருத்தரங்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மஹாலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிரகாஷ் காரத்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , கனிமொழி, திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது:

“மாணவர்களும், இளைஞர்களும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். எல்லாப் பாகுபாடுகளையும் மறந்து இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கின்ற போராட்டம் என மாற்றாமல் இந்தியாவிற்கான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். 15 நாளில் இந்த புரட்சியை காணமுடிகிறது என்றால் கண்டிப்பாக மக்களை நம்பி எவ்வளவு பெரிய புரட்சியிலும் இறங்கலாம்.

ஐஐடியில் படித்த ஜெர்மன் மாணவர் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெளியேற்றப்பட்டது நமக்கான தலைகுனிவு. ஐஐடி இயக்குனர்,தலைவர் இதைப் பற்றிய கேள்வி கேட்கவில்லை.

இந்த சட்டத்தின் மூலமாக முதலில் அசாம் மாநிலத்தில் இருக்கக்கூடிய 19 லட்சம் மக்களை வெளியேற்ற போகிறது என்றால் அவர்களை எங்கு அனுப்பப் போகிறார்கள். அவர்களை சிறையில் வைக்க போகிறார்கள் என்றால் அதற்கான செலவு ஆயிரக்கணக்கான கோடிகள் ஆகும். அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அரசானது நாஜி ஜெர்மானிய வழியில் சென்று கொண்டிருக்கிறது. ஹிட்லர் வழியில் காந்தி நாடு சென்று கொண்டிருக்கிறது. 2003-ல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த சட்டமானது 2011-ல் கணக்கெடுப்பு செய்யும் பணியை தொடங்கியது. 15 அடிப்படை கேள்விகள் மட்டுமே இருந்த இந்த சட்டத்தில் 21கேள்விகளை பாஜக தற்போது சேர்த்துள்ளது.

பிரதமர், உள்துறை அமைச்சர் என்ன சொன்னாலும் அது மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் ஆனால் இப்பொழுதுஅவர்கள் என்ன சொன்னாலும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

பெரும்பாண்மையுடம் ஆட்சி அமைத்திருந்தாலும், ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் நலன், விவசாயிகள் தற்கொலை, பாலியல் வன்கொடுமை, நாட்டின் பொருளாதாரம் பற்றியெல்லாம் கவனம் செலுத்தாமல் ஆட்சிக்கு வந்தவுடன் முத்தலாக் சட்டம், என்.ஆர்.சி மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை கொண்டு வந்து இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற பாஜக முயற்சி செய்து வருகிறது

130 கோடி மக்களும் இந்தியர்களாக இருக்க வேண்டும் என நினைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்துக்களாக இருக்க வேண்டும் என நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து தேசம் என்று வந்தால் மீண்டும் மேல்ஜாதி கீழ் ஜாதி என்ற பாகுபாடு வரும். அதனால் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல பின்தங்கிய மக்கள், தலித், மலைவாழ் மக்களும் பாதிக்கப்படுவார்கள்”.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x