Last Updated : 27 Dec, 2019 02:43 PM

1  

Published : 27 Dec 2019 02:43 PM
Last Updated : 27 Dec 2019 02:43 PM

ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியிலனத்தவருக்கு ஒதுக்கியதால் தேர்தல் புறக்கணிப்பு: திருச்செந்தூர் பிச்சிவிளையில் 6 வாக்குகள் மட்டுமே பதிவு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் 6 ஓட்டுகள் மட்டுமே பதிவானது.

தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். அதுபோல சாத்தான்குளம் ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சியில் 6-வது வார்டு பகுதி மக்களும் தேர்தலைப் புறக்கணித்தனர்.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பிச்சிவிளை கிராம ஊராட்சி. இங்கு மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் மொத்தம் 785 வாக்குகள் உள்ளன. இந்த ஊராட்சித் தலைவர் பதவி இம்முறை சுழற்சி முறையில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஊராட்சியில் பட்டியலினத்தவருக்கு வெறும் 6 வாக்குகள் மட்டுமே உள்ளன.

எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளுக்கும் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. மேலும், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து ஊரில் கறுப்பு கொடிகளை கட்டினர். தலைவர் பதவிக்கு மட்டும் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, சுந்தராச்சி என்ற இரு பெண்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் பிச்சிவிளை ஊராட்சியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பட்டியலினத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 வாக்காளர்களும் மட்டுமே வாக்களித்தனர். மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. ஒட்டுமொத்தமாகத் தேர்தலை புறக்கணித்தனர். வீடுகளில் கறுப்புக் கொடியும் ஏற்றிவைத்தனர்.

பிச்சிவிளை ஊராட்சியில் 6 வார்டுகளுக்கும் ஏற்கெனவே யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் மொத்தமுள்ள 785 வாக்குகளில் 6 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

எனவே, இந்தத் தேர்தல் செல்லுமா அல்லது ரத்து செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களை சமாதானம் செய்ய அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தாய்விளை கிராமம்:

இதேபோல் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் எழுவரைமுக்கி ஊராட்சியில் உள்ள தாய்விளை கிராம மக்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

எழுவரைமுக்கி ஊராட்சியில் தாய்விளை கிராமம் 6-வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது. பகுதிநேர நியாயவிலைக் கடை கோரி தேர்தல் புறக்கணிப்பை இக்கிராம மக்கள் வெளியிட்டனர்.

இருப்பினும் அதிகாரிகள் முறையாக உறுதியளிக்காததால் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் எழுவரைமுக்கி ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த வார்டு பகுதியான தாய்விளை கிராம மக்கள் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் முழுமையாக புறக்கணித்தனர்.

இந்த வார்டில் மொத்தம் 277 வாக்குகள் உள்ளன. இதில் மதியம் வரை 1 வாக்கு மட்டுமே பதிவாகியிருந்தது. அதிகாரிகள் தொடர்ந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x