Last Updated : 27 Dec, 2019 12:56 PM

 

Published : 27 Dec 2019 12:56 PM
Last Updated : 27 Dec 2019 12:56 PM

தேனியில் காலை 11 மணி நிலவரப்படி 29% வாக்குப்பதிவு: வீல்சேர் வசதி இல்லாததால் முதியோர் தவிப்பு

வாக்களிக்க வந்த 90 வயது மூதாட்டி, (இடது) முதன்முறை வாக்களிக்க வந்த இளம் வாக்காளர் சினேகா.

தேனி

தேனியில் காலை 11 மணி நிலவரப்படி 29% வாக்குப்பதிவாகியுள்ளது. இதுவரை பெரிய சச்சரவுகள் ஏதும் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடந்துவருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் கடமலை - மயிலாடும்பாறை ஒன்றியப் பகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த இரு ஒன்றியங்களிலும் 3 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 33 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் , 48 ஊராட்சித் தலைவர் பதவி, 417 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி என 501 பதவிகள் உள்ளன. இதில் 139 பதவிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்று 362 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

வீல்சேர் இல்லை..

இதற்கிடையே கண்டமனூர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதியோர்களுக்கான வீல் சேர் வசதி எதுவும் இல்லை. ஆட்டோக்களையும் வாக்குச்சாவடி முன்பு அனுமதிக்காததால் மிகவும் சிரமப்பட்டு வந்து வாக்களித்தனர்.

இதுகுறித்து குழந்தையம்மாள் (90) கூறுகையில், "நான் வந்த ஆட்டோவை 200 மீட்டர் தூரத்துக்கு முன்பாகவே நிறுத்திவிட்டனர். எனவே உறவினர்கள் இருவர் என்னை கைத்தாங்கலாகப் பிடித்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். இங்கும் வீல்சேர் வசதி இல்லை இதனால் மிக சிரமப்பட்டு வந்து வாக்களித்தேன்" என்றார்.

கையெழுத்துக்கு பதில் கைநாட்டு..

ஒவ்வொருவரும் 4 வாக்குகள் அளிக்க வேண்டி இருந்ததால் வாக்காளர்களிடம் தனித்தனியே நான்கு கையெழுத்து பெற்று 4 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் வாக்குப்பதிவு மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் மயிலாடும்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கையெழுத்து போடத் தெரிந்தவர்களிடம் கூட கைநாட்டு வாங்கி விரைவாக‌ வாக்குப்பதிவு நடைபெற்றது. கைநாட்டு வைத்ததும் வாக்குச்சீட்டு கொடுக்கப்பட்டதால் கைநாட்டு வைத்த மை வாக்குச்சீட்டுகளில் ஒட்டியது. இதனையடுத்து, கைநாட்டு மையை துணியில் துடைத்துவிட்டு வாக்குச்சீட்டை பயன்படுத்துமாறு அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.

வியாபாரிகள் ஏமாற்றம்:

கடமலைக்குண்டு மயிலாடும்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் வாக்குச்சாவடி அமைந்த பகுதியில் இருந்த கடைகளை மூட போலீஸார் உத்தரவிட்டனர். இப்பகுதியில் உள்ள உணவகங்கள் தேர்தல் நாளன்று கூடுதல் விற்பனை இருக்கும் என்பதற்காக பல்வேறு பொருட்களை தயார் செய்து வைத்திருந்தனர். இதனால் இது விரயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குழப்பம் இல்லை..

முதல் முறையாக வாக்களித்த மயிலாடும்பாறை சேர்ந்து சினேகா என்பவர் கூறுகையில் "இந்தத் தேர்தலில் வாக்களிப்பது சந்தோஷமாக இருக்கிறது நான்கு ஓட்டு என்றாலும் குழப்பம் இல்லை" என்றார்.

வாக்குவாதம்..

மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாவட்ட கவுன்சில் வேட்பாளர் போஸ் பார்வையிட்டது குறித்து போலீஸார் கண்டனம் தெரிவித்தனர். வாக்குச் சாவடியை பார்வையிட வந்தபோது போலீஸார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் நீண்ட நேரம் அங்கு நிற்கக்கூடாது என்று கூறினர்.

இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. வெங்கடேசனுக்கும் போலீஸாருக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போலீஸார் தலையிட்டு சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் காலை 11 மணி நிலவரப்படி 32 சதவீதமும் மயிலாடும்பாறை ஒன்றியத்தில் 26 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x