Published : 26 Dec 2019 09:36 PM
Last Updated : 26 Dec 2019 09:36 PM
நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
நிலத்தடி நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் முதற்கட்டமாக குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டரா, உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8350 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தைத் நேற்று தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘7 மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களின் 8300 கிராம பஞ்சாயத்துகளின் நிலத்தடி நீர் மட்டம் கவலை அளிக்கிறது. 5 ஆண்டுகளில் 15 கோடி வீடுகளில் குழாய்களில் தண்ணீர் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதி செய்யும்.
பல்வேறு தேவைகளில் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைக்கும் தொழில்நுட்பங்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். இந்த திட்டம் ராஜஸ்தான் உட்பட 7 மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.
இந்நிலையில், அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறுகையில் ‘‘நிலத்தடி நீர் மேலாண்மைக்காக அடல் பூஜல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற பல மாநிலங்களை போல தமிழகமும் தண்ணீர் பற்றாக்குறையுள்ள மாநிலமாக விளங்குகிறது. நிலத்தடி நீரை நம்பி தமிழகத்தின் பல பகுதிகள் உள்ளன.
நீர் ஆதாரங்களை மேம்படுத்த குடிமராமத்து உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறோம். எனவே நிலத்தடி நீர் மேம்பாட்டு திட்டமான அடல் பூஜல் யோஜனா திட்டத்தில் தமிழகத்தையும் சேர்க்க வேண்டும். ஜல்சக்தித்துறைக்கு தாங்கள் இதுதொடர்பாக அறிவுறுத்தல் வழங்க வேண்டும்’’ முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT