Published : 26 Dec 2019 07:54 AM
Last Updated : 26 Dec 2019 07:54 AM

‘ல‌ஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் தற்கொலை: காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை

சென்னை

‘ல‌ஷ்மன் ஸ்ருதி’ இசைக்குழுவின் உரிமையாளர்களில் ஒருவரான ராமன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து அசோக்நகர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் பல்வேறு இசைக் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்ற நிறுவனம் ‘லஷ்மன் ஸ்ருதி’ இசைக் குழு. இக் குழுவை சகோதரர்களான முருகவேல், ராமன்(54), லஷ்மணன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.

சென்னை அசோக்நகரில் ‘லஷ்மன் ஸ்ருதி’ என்ற இசை கருவி விற்பனை செய்யும் நிலையத்தையும் நடத்தி வந்தனர். உரிமையாளர்களில் ஒருவரான ராமன், கோடம்பாக்கம், டாக்டர் சுப்பராயன் நகரில் மனைவி நிர்மலா, மகன் மனோஜ் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், சென்னையில் நடந்து கொண்டிருக்கும் லஷ்மன் ஸ்ருதியின், ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் ராமன் கலந்து கொண்டார். மாலை 6.30 மணி அளவில் திடீரென்று வீட்டுக்குச் சென்ற ராமன், கதவை உள் பக்கமாக தாளிட்டுக் கொண்டு, உள்ளே இருந்த மின்விசிறியில் கயிற்றால் தூக்கு மாட்டி கொண்டதாகக் கூறப்படுகிறது.

இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரது மனைவி நிர்மலா, தாயார் மற்றும் கார் ஓட்டுநர் வினோத் ஆகியோர் வீட்டுக்குச் சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் ராமன் கதவைத் திறக்காததால் பதற்றமடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அறையில் ராமன் மயங்கிய நிலையில் தூக்கில் தொங்கிபடி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராமன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். பின்னர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "உயிரிழந்த ராமன், மூலம் (பைல்ஸ்) மற்றும் நெஞ்சுவலியால் அவதியுற்று வந்துள்ளார். நெஞ்சுவலிக்காக ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக, மூலம் நோயால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது குடும்ப பிரச்சினை, கடன் தொல்லை உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

ராமன் உடலுக்கு அமைச்சர் ஜெயக்குமார், திரைப்பட இசையமைப்பாளர் தேவா, பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னி கிருஷ்ணன், மனோ, வேல்முருகன், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x