Published : 26 Dec 2019 07:45 AM
Last Updated : 26 Dec 2019 07:45 AM
சென்னையில் 2-வது மின்சார பேருந்து 3 வழித்தடங்களில் சோதனை முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்தில் ஒரு முறை சார்ஜர் ஏற்றினால், 250 கிமீ தூரத்துக்கு ஓடும் அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையும் லண்டன் மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சி-40 முகமைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கிடையே, தமிழகத்தில் கோயம்புத்தூர் - 100, திருச்சிராப்பள்ளி - 100, மதுரை - 100, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூரில் தலா 50 பேட்டரி பேருந்துகளும், தஞ்சாவூரில் 25 என மொத்தம் 525 மின்சார பேருந்துகளும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சென்னைக்கு மட்டும் 300 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஆய்வு நடத்தி வருகிறது. குறிப்பாக, தியாகராய நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், கேளம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் சோதனை முறையில் இயக்கப்படவுள்ளன.
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூரில் உள்ள அசோக் லைலேண்டு நிறுவனம் தயாரித்துள்ள மின்சார பேருந்து ஒன்று சென்னை சென்ட்ரல் - திருவான்மியூருக்கு ஏ.1 வழிதடத்தில் கடந்த 3 மாதங்களாக சோதனை முறையில் இயக்கப்பட்டது. இதற்கிடையே, அடுத்தகட்டமாக 2-வது மின்சார பேருந்து, 3 வழித்தடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் 2-வது மின்சார பேருந்து கோயம்பேடு - பிராட்வே, சிறுச்சேரி - கோயம்பேடு, சிறுச்சேரி - பிராட்வே ஆகிய 3 வழித்தடங்களில் சுழற்சி முறையில் இயக்கப்படுகிறது.
இந்திய போக்குவரத்து தரக் கட்டுப்பாடு அமைப்பால் தகுதி பெற்ற இப்பேருந்தில், மின்கலன் இருப்பு நிலை மற்றும் வெப்பநிலை, ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, பேருந்தில் ஏற்படும் மின்கசிவைக் கண்டறிந்து அதை தானாக செயலிழக்க வைத்தல் தொடர்பான தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளன.
அவசர கால கதவுகள், தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, அவரகால உதவிக்கு ஓட்டுநருக்கு தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளிட்டவை உள்ளன. ஏற்கெனவே இயக்கப்பட்ட மின்சார பேருந்துக்கு சார்ஜர் தனியாக இருக்கும். அதை எடுத்து சார்ஜர் போட்ட பிறகு, பேருந்தில் பொருத்தி இயக்கப்படும். ஆனால், இந்த மின்சார பேருந்தில் அதிவிரைவு சார்ஜர் வசதி இருக்கிறது.
பேருந்துடன் இந்த சார்ஜர் வசதி இணைக்கப்பட்டு இருக்கும். ஒரு முறை சார்ஜர் ஏற்றினால், சுமார் 250 கிமீ தூரத்துக்கு இயக்கலாம் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் கூறியுள்ளனர். எனவே, இந்த மின்சார பேருந்தும் முழுமையான சோதனை ஓட்டம் நடத்திய பிறகே, மக்களின் பயன்பாட்டுக்கு தொடர்ந்து இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT