Published : 31 Mar 2014 12:29 PM
Last Updated : 31 Mar 2014 12:29 PM
செங்கல்பட்டில் பெண்கள் கூட்டாகச் சேர்ந்து கிராமப் பெண்களின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.
செங்கல்பட்டில் இயங்கி வரும் தமிழக பெண்கள் இயக்கத்தின் தலைவி ஆர்.வசந்தா, கிராமப்புறப் பெண்களை ஒன்று திரட்டி அவர்களின் உரிமைகளுக்காக போராடியுள்ளார். அவர் கிராம பெண்களுக்கான தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளார்.
அதன் விவரம்: இலவச திட்டங்களை கைவிட்டு, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தை அரசு ஏற்படுத்தித் தருவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
கல்வி மற்றும் எல்லா வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். சமுதாய ரீதியான ஒதுக்கீடுகள் அனைத்திலும் இது உள் அம்சமாக அமைய வேண்டும்.
பெண்கள் குடிசைத் தொழில் செய்வதற்கான பயிற்சி மற்றும் நிதியுதவி வழங்கி, அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தித் தர வேண்டும். படித்த கிராமப்புற பெண்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பள்ளிகள்தோறும் பாலியல் வன்முறை விசாரணை கமிட்டியை அமைக்க வேண்டும். பெண்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் விதமாக மாவட்டம்தோறும் மகளிர் ஆணைய கிளைகளைத் திறக்க வேண்டும்.
பெண்கள் கூட்டு விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாய நிலங்களை, வீட்டுமனைகளாக மாற்ற முடியாதபடி கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கிராமப் பெண்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து தமிழக பெண்கள் இயக்கத் தலைவி ஆர்.வசந்தாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இந்த தேர்தல் அறிக்கை குறித்து, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். கிராமப் பகுதியில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம், கிராமப் பெண் களின் தேர்தல் அறிக்கையை அளிக்க வேண்டும். வெற்றிபெற் றால் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை நிறைவேற்றுவதாக வேட்பாளர்கள் உறுதியளிக்குமாறும், கையெழுத்திட்டு தருமாறும் வலியுறுத்த வேண்டும் என்று கிராமப்புற பெண்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறேன் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT