Published : 25 Dec 2019 07:20 AM
Last Updated : 25 Dec 2019 07:20 AM

நாளை நடக்கவுள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை இழப்பு ஏற்படும்: கண் மருத்துவர் மோகன் ராஜன் எச்சரிக்கை

சென்னை

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்த்தால் பார்வை இழப்பு ஏற்படும். இதை குணப்படுத்த முடியாது என்று சென்னை ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் தெரிவித்தார்.

சூரியனுக்கும், பூமிக்கும் நடுவே சந்திரன் வந்து சூரியனை மறைக்கும் ‘சூரிய கிரகணம்’ நிகழ்வு நாளை காலை 8 மணி முதல் 11.15 மணி வரை நடக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலோ, தொலைநோக்கி அல்லது எக்ஸ்ரே ஷீட் போன்ற பொருட்கள் மூலமாகவோ பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மை கொண்ட சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், கிரகண பிம்பத்தை திரையில் விழ வைத்தும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கலாம். சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் கண்டுகளிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

பார்வை இழப்பு

சூரிய கிரகணத்தை உரிய பாதுகாப்பு இல்லாமல் பார்த்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மோகன் ராஜன் கூறியதாவது:

கிரகணம் இல்லாத நாட்களில் நாம் வெறும் கண்களால் சூரியனை பார்க்க முடியாது. அப்படி பார்க்கும்போது இமைகள் தானாகவே கண்களை மூடிவிடும். ஆனால், கிரகணத்தின்போது சூரியனை வெறும் கண்களால் எளிதாக பார்க்க முடியும். அவ்வாறு 50 முதல் 90 விநாடிகள் பார்க்கும்போது, நமக்கு தெரியாமல் சூரியனின் கதிர்கள் கண்களின் விழித்திரையின் மத்திய பகுதியை பாதிக்கும். இதனால், சிலருக்கு உடனடியாகவும், ஓரிரு நாட்களிலும் பார்வை இழப்பு மற்றும் பார்வை குறைதல் ஏற்படும். இதன்மூலம் ஏற்பட்ட பார்வை இழப்பை திரும்பக் கொண்டுவர முடியாது.

வெளியே செல்லலாமா?

கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் மட்டுமின்றி யாருமே வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. சூரியனின் நேரடி கதிர்வீச்சு உடலுக்கு நல்லது அல்ல. சூரியன் கதிர்வீச்சு மட்டுமல்லாது, எந்த கதிர்வீச்சும் உடலுக்கு நல்லது அல்ல. கிரகணத்தின்போது ஏற்படும் சூரியனின் கதிர்வீச்சு உடலில் படும்போது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்கவே, சூரிய கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

சிறப்பு கண்ணாடி

சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புவோர் அதற்கான சிறப்பு கண்ணாடியை (Eclipse Viewer) அணிந்து பார்க்கலாம். அமெரிக்காவில் தயாரிக்கப்படும் இந்த கண்ணாடி பிரபல வலைதளங்களில் கிடைக்கிறது. இது மிகவும் பாதுகாப்பானது. ஒரு கண்ணாடி ரூ.200-க்கு கிடைக்கும். இதை அணிந்து சூரிய கிரகணத்தை பார்க்கலாம். கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக போலி கண்ணாடிகளை வாங்கி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்கள் பாதிக்கப்படக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x