Published : 24 Dec 2019 06:20 PM
Last Updated : 24 Dec 2019 06:20 PM

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் அலங்காநல்லூர் திருநங்கை சிந்தாமணி

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு புகழ் பெற்ற அலங்காநல்லூரில் திருநங்கை ஒருவர், 5 ஆண்டாக 3 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறார்.

‘வீர தமிழ்ச்சி’ அடைமொழியுடன் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் இவரது காளைகள் இதுவரை தோல்வியே சந்தித்து இல்லை.

வீரத்திற்கும், சாதிப்பிற்கும் பாலினம் ஒரு தடையாக இல்லை என்பதை பல காலக்கட்டங்களில் பலர் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

ஆண்கள் சாதிக்கும் துறைகளில் பெண்களும் போட்டிப்போட்டு முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது இவர்களுக்கு போட்டியாக மூன்றாவது பாலினத்தவர்களான திருநங்கைகளும் அரசு துறை வேலைவாய்ப்புகளில் மட்டுமில்லாது சொந்தமாக தொழில்கள் தொடங்கியும் பல்வேறு துறைகளில் சாதிக்கத் தொடங்கி உள்ளார்கள்.

அடுத்தக்கட்டமாக திருநங்கைகள் விளையாட்டுகளிலும் தடம்பதிக்க தொடங்கி விட்டார்கள். அதுவும், ஆண்களுக்கான வீர விளையாட்டாக அடையாளப்படுத்தப்படும் ஜல்லிக்கட்டில் அலங்காநல்லூர் கல்லணை கிராமத்தில் திருநங்கை சிந்தாமணி என்ற வினோத்குமார் சத்தமில்லாமல் தடம்பதித்து வருகிறார். இவர் வளர்க்கும் 3 ஜல்லிக்கட்டு காளைகள் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியே கண்டதில்லை.

தற்போது ஜல்லிக்கட்டுப்போட்டி நெருங்கிவிட்டதால் தன்னுடைய காளைகளுக்கு செயற்கையாக அமைத்த வாடிவாசலில் பயிற்சி வழங்கி கொண்டிருந்த வினோத்குமாரிடம்(வயது 30) பேசினோம்.

அவர் கூறுகையில், ‘‘5 ஆண்டாக ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கிறேன். கூடவே பசு மாடும் வளர்க்கிறேன். காலையில் மாடுகளை மேய்க்கச் செல்வேன். மாலையில் ஹோட்டலில் வேலைக்கு போவேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் இந்தக் காளைகளை பராமரிக்கிறேன்.

இதுவரை பாலமேடு, அவனியாபுரம், திருச்சி உள்பட தமிழகத்தில் 27 வாடிவாசல்களுக்கு என்னோட காளைகளை அழைத்து சென்றுள்ளேன். ஒரு முறைகூட மாடுபிடி வீரர்களிடம் பிடிபடவில்லை.

என்னை ஆரம்பத்தில் உறவினர்கள், நண்பர்கள், கேலி கிண்டல் செய்தனர். மனசு உடைந்துபோய் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினேன். அதனாலே, பள்ளி படிப்போடு நின்றவிட்டேன்.

ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்றால் யாரும் வேலை தர முன்வரவில்ல. என் சக வயதுக்காரர்கள் யாரும் என்னை பக்கத்தில் அண்ட விட மாட்டார்கள். வீட்டிலும் ஏன்டா இப்படியிருக்கிறன்னு சத்தம் போட்டார்கள். மனசு உடைந்துபோன நிலையிலான், அன்றாட வாழ்வாதாரத்திற்கு பசு மாடு வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். எங்க ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை சிறு வயதில் இருந்தே பார்க்க செல்வேன். எனக்கு காளை அடக்க ஆசை. மாடுபிடி வீரருக்கு பதிவு செய்தால் சேர்க்க மாட்டார்கள். மாடுபிடி வீரராகத்தானே சேர்க்க மறுக்கிறீர்கள், காளை உரிமையாளராக ஜல்லிக்கட்டுக்கு வருகிறேன் என்று, பசு மாட்டு வளர்ப்பில் கிடைத்த பணத்தை வைத்து 5 ஆண்டிற்கு முன் 3 ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். அந்தக் காளைகள் பராமரிப்புக்கு செலவு ஆனதால் அதை சமாளிக்க மாலையில் ஹோட்டலில் வேலைக்கு சென்று விடுவேன்.

என்னுடைய காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடும்போது, வீரத்தமிழச்சி காளை வருகிறது என்ற அடைமொழியுடன் பெருமைப்படுத்துவார்கள். அந்த கண நேரங்களில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

அன்றாட பிழைப்பிற்கு பசு மாடு வளர்க்கிறேன். காளைகள் பராமரிப்பிற்கு ஹோட்டல் வேலைக்கு செல்கிறேன். என் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழுகிறேன்.

நான் உள்பட என்னைபோன்ற திருநங்கைகள் இப்படி பிறந்தது என்னோட தவறில்லை. ஆனால், அதையே சொல்லி வாழ்க்கையில் முடங்கிவிடாமல் நம்ம மனதுக்கு பிடித்தவிஷயங்களில்

கவனம் செலுத்தினால் நமக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். யாரெல்லாம் இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்க விடாமல் விரட்டினார்களோ, ஒதுக்கினார்களோ

தற்போது அவர்களே என்னை வரவேற்று உபசரிக்கிறார்கள்.

போட்டியில் திருநங்கையாக பங்கேற்றதிற்காக சிறப்பு பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்துகிறார்கள், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x