Last Updated : 24 Dec, 2019 03:01 PM

 

Published : 24 Dec 2019 03:01 PM
Last Updated : 24 Dec 2019 03:01 PM

நீர் நிலைகள் மீட்டெடுப்பில் முதலிடம்: சிவகங்கை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம்  பாராட்டு

மதுரை

நீர் நிலைகள் மீட்டெடுப்பில் தீவிரம் செலுத்தி வருவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியரை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தஞ்சாகூரைச் சேர்ந்த அறிவழகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தஞ்சாகூர் கிராமத்தை சுற்றிலும் ராணி ஊரணி , பட்டு ஊரணி, தோப்புகார ஊரணி, அடைக்காத்தான் ஊரணி,வண்ணான் ஊரணி கண்ணாத்தாள் ஊரணி என ஆறு ஊரணிகள் உள்ளது.

இந்த ஊரணிகளுக்கு வைகை நதியில் இருந்து மார்நாடு கண்மாய் வாய்க்கால் வழியா நீர் வரும். தற்போது வைகை அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்தும் இந்த ஊரணிகளுக்கு தண்ணீர் வரவில்லை.

ஊரணிகளுக்கு வரும் வாய்க்கால்களை அரசு முறையாக தூர் வாராததால் தண்ணீர் வரவில்லை. எனவே வாய்க்காலில் வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி ஊரணிகளுக்கு வரும் வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது கண்மாய்களை தூர்வார நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நீதிபதி, நீதிமன்ற உத்தரவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றியுள்ளார். கண்மாய்கள் தூரவாரப்பட்டுள்ளது. சீமை கருவேலமரம் அகற்றபட்டுள்ளது. ஆட்சியரின் நடவடிக்கையால் சிவகங்கை மாவட்டத்தில் 90 சதவீத நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெ.ஜெயகாந்தன் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x