Published : 24 Dec 2019 09:54 AM
Last Updated : 24 Dec 2019 09:54 AM
பைகாரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தடையை மீறுவதால், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தாவரவியல் பூங்கா, ரோஜாப் பூங்கா, தொட்டபெட்டா, பைகாரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி, அப்பர்பவானி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டுச் செல்வது வழக்கம்.
உதகை - கூடலூர் சாலையில் 22 கி.மீ. தொலைவில் பைகாரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சிக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த படகு இல்லத்தில் 5 ஸ்பீடு படகுகள் மற்றும் 17 மோட்டார் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து பெய்த மழையால் பைகாரா படகு இல்லத்தில் தண்ணீரின் அளவு மளமளவென உயர்ந்து, கடல்போல காட்சியளிக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணையில், மின் உற்பத்திக்காக தண்ணீர்திறக்கப்படும்போது பைகாரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக்காண ரம்மியமாக இருக்கும். தற்போது அணையில் தண்ணீர் இருப்பு அதிகரித்து, தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர்வீழ்ச்சி ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்நிலையில், பைகாரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் பாதுகாப்புக்காக வனத்துறை சார்பில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சில சுற்றுலாப் பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக தடுப்புகள் மீது ஏறி நின்றும், தடுப்புகளைத் தாண்டியும் செல்கின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனத்துறை சார்பில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அத்துமீறும் சுற்றுலாப் பயணிகளை கண்டிப்பதோடு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT