Published : 24 Dec 2019 08:48 AM
Last Updated : 24 Dec 2019 08:48 AM

வரும் 26-ம் தேதி சூரிய கிரகணம்: உதகமண்டலத்தில் பொதுமக்கள் காண ஏற்பாடு

சென்னை

வரும் 26-ம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணத்தை நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் பொதுமக்கள் கண்டுகளிக்க இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், புணேயில் உள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் திவ்யா ஓபராய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

வரும் 26-ம் தேதி வியாழக்கிழமை நிகழ உள்ள வளைய சூரிய கிரகண நிகழ்வை உலகின் பல நாடுகளில் காண முடியும். தமிழகம் உட்பட தென்னிந்திய பகுதிகளிலும் இந்த கிரகணத்தை கண்டுகளிக்கலாம். நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இந்த சூரிய கிரகண நிகழ்வை தெளிவாக காண முடியும்.

இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, உதகமண்டலத்தில் உள்ள, ரேடியோ வானியல் மையம்(முத்தோரை) மற்றும் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக சூரிய கிரகணத்தை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரேடியோ வானியல் மையத்துடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ககோல் மண்டல் மற்றும் இந்திய வானியல் சங்கத்தின் பொதுமக்கள் மற்றும் கல்வி குழு ஆகிய அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.

வளையம்போல் காட்சி தரும்

சூரிய கிரகணம் வரும் வியாழக்கிழமை காலை 8.05 மணிக்கு தொடங்கும். காலை 9.26 மணிக்குகிரகணத்தின் உச்ச நிலை தொடங்கி, அடுத்த 3 நிமிடங்களுக்கு நீடிக்கும். அப்போது சூரியனின் மையப் பகுதி முழுவதும் நிலவால் மறைக்கப்பட்டு, சுற்றிலும் விளிம்பு பகுதிகளில் இருந்து மட்டும் சூரிய ஒளி வீசும். அப்போது சூரியன் அழகிய வளையம்போல் காட்சி தரும். அதன் பிறகு கிரகணம் விலகத் தொடங்கி, காலை 11.09 மணிக்கு சூரிய கிரகணம் நிறைவு பெறும்.

சூரிய கிரகண நிகழ்வு பற்றிபொதுமக்களுக்கு விளக்குவதற்காக உதகமண்டலத்தில் இரண்டு இடங்களிலும் தன்னார்வலர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ரேடியோ டெலஸ்கோப்பை பயன்படுத்தி சூரிய கிரகண நிகழ்வு பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கப்படும். மேலும், கிரகணத்தை கண்டுகளிக்க பாதுகாப்பு கண்ணாடிகளும் வழங்கப்படும்.

கட்டணம் இல்லை

பொதுமக்களிடையே, குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுகளில் கட்டணம் எதுவும் இன்றி அனைவரும் பங்கேற்கலாம்.

இவ்வாறு திவ்யா ஓபராய் கூறிஉள்ளார்.

விஞ்ஞானிகள் வருகை

நூறு சதவீதம் வளைய சூரிய கிரகணம் நிகழ உள்ள பாதையில் உதகமண்டலம் அமைந்துள்ளதால், அன்றைய தினம் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உதகமண்டலம் ரேடியோ வானியல் மையத்தில் கூடி, பல ஆய்வுகளில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மையத்தில் திறன் மிகுந்த ரேடியோ டெலஸ்கோப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x