Published : 24 Dec 2019 08:25 AM
Last Updated : 24 Dec 2019 08:25 AM

மருத்துவக் கழிவை குப்பையில் கொட்டும் மருத்துவமனைகள் மூடப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை

மருத்துவ திடக் கழிவுகளை குப்பைகளுடன் சேர்த்து கொட்டினால்,சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள்,ரத்தப் பரிசோதனை மையங்கள் மூடப்படும், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் சீதாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் மூலம் உயிரியல் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, ரத்த வங்கி, ஆய்வகம், தடுப்பூசி மையம், ரத்த வங்கி முகாம், பள்ளிகளில் உள்ள முதலுதவி மையம், ரத்த பரிசோதனை மையம், நோயியல் ஆய்வகம், ஆயுஷ் மருத்துவமனைகள் ஆகியவை அனைத்தும் இந்த விதிகளில் கூறப்பட்டுள்ள வகையில், மருத்துவ திடக் கழிவுகளை முறையாக கையாண்டு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்று அப்புறப்படுத்த வேண்டும்.

இதுதவிர, மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ திரவக் கழிவுகள் அந்தந்த வளாகத்திலேயே முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

மேலும், மருத்துவ திடக் கழிவுகளை தாங்களே கையாள இயலாத காரணத்தால், சென்னை புறநகர் பகுதிகளில் 2 பொது மருத்துவ திடக் கழிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து மருத்துவமனைகளும் தங்கள் மருத்துவ திடக் கழிவுகளை இந்த மையங்களுக்கு அனுப்பி கையாளப்பட்டு வருகிறது.

இருப்பினும், சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மருத்துவ திடக் கழிவுகள், காலாவதியான மாத்திரை, மருந்துகள் ஆகியவை குப்பை கழிவுகளுடன் சேர்த்து கொட்டப்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன.

அதன் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த நிறுவனங்கள் கொட்டிய மருத்துவ திடக் கழிவுகளை சேகரித்து பொதுமருத்துவ திடக் கழிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இனி இதுபோல நடக்காத வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், கால்நடை மருத்துவ மனைகள் உள்ளிட்டவை தங்கள் மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து மருத்துவ திடக்கழிவு மையங்களுக்கு மட்டுமேஅனுப்ப வேண்டும். தவறினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த நிறுவனங்களை மூடுவது, மின் இணைப்பை துண்டிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் விதத்தில் நிலத்திலோ, நீர்நிலைகளிலோ மருத்துவ திடக் கழிவுகள் கொட்டப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு பெறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon