Published : 24 Dec 2019 08:15 AM
Last Updated : 24 Dec 2019 08:15 AM

போலி பில் தயாரித்து ஜிஎஸ்டி வரியில் ரூ.900 கோடி மோசடி செய்த 3 பேர் கைது

சென்னை

சென்னை மண்டல ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் கே.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி), வரிச் சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங்கள் உருவாக்கி, அதன் பெயரில் பில்கள் தயாரித்து வழங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கடந்த 19, 20 தேதிகளில் சோதனை நடத்தினர்.

இதில், பலரது அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான் அட்டை போன்றவற்றை பயன்படுத்தி, பல்வேறு பெயர்களில் போலி நிறுவனங்கள் தொடங்கி ரூ.900 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலமாக, ரூ.152 கோடி உள்ளீட்டு வரிச் சலுகை பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், மோசடி செய்ததற்காக கமிஷனாக பெறப்பட்ட ரூ.24 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட ஆதார், பான் உட்பட பல்வேறு அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலும் விழுப்புரம் மாவட்ட கிராமங்களை சேர்ந்த பெண்களின் அடையாள அட்டைகளே இருந்தன. அரசு திட்டங்களில் கடன் உதவி பெற்றுத் தருவதாக கூறி, அவர்களது அடையாள அட்டைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x