Published : 24 Dec 2019 07:45 AM
Last Updated : 24 Dec 2019 07:45 AM

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா; மாணவிகளின் சாதனை தேசத்தின் எதிர்காலத்தை காட்டுகிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சாதனை படைத்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி, சான்றிதழ்களை வழங்குகிறார். அருகே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, துணைவேந்தர் குர்மீத் சிங் உள்ளிட்டோர்.படம்: செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் தில் மாணவிகள் அதிக அளவில் தங்கப் பதக்கம் குவித்ததை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘இது தேசத்தின் எதிர்காலத்தையும், தலைமைப் பண்பையும் காட்டுகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் 27-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் குடியரசுத் தலைவரும், புதுவைப் பல்கலைக்கழக பார்வையாளருமான ராம்நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி, உரையாற்றினார். அவர் கூறியதாவது:

நான் வழங்கிய 10 தங்கப் பதக்கங்களை பெற்றவர்களில் 9 பேர் மாணவிகள். மொத்தமுள்ள 189 தங்கப் பதக்கங்களை பெறுவோரில் 137 பேர் பெண்கள். அதில் ஆண்கள் 52 பேர்தான். நமது தேசத்தின் எதிர்காலத்தையும், தலைமைப் பண்பையும்தான் இது காட்டுகிறது.

2019-20-ல் கல்வி ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்ட6,500 பேரில் பாதி அளவு மாணவிகள் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் வெளி மாநிலத்தவர்கள்.

சமூக பொறுப்பானவர்கள்

பல்கலைக்கழகமாக இருந்தாலும் வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் இறுதியில் நாம் அனைவரும் சமூகத்தின் அங்கம்தான். சமூகத்துக்கு பொறுப்பானவர்களாக நாம் இருக்கிறோம். பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் அந்த நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை சமூகத்துக்கு செலவிட அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இது பல்கலைக்கழக அளவிலும் விரிவாக்கப்படும் என நம்புகிறேன்.

‘தூய்மை இந்தியா' திட்டத்தைபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாவதாக செயல்படுத்தியதுடன், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் அளித்துள்ளனர். இப்பல்கலைக்கழகமும், இணைப்பு கல்லூரிகளும் 103 கிராமங்களை தத்து எடுத்துள்ளன. இவற்றை முன்மாதிரி கிராமங்களாக மேம்படுத்த முயற்சி நடக்கிறது.

கிராம இளைஞர்களுக்கு உதவிசெய்ய சமுதாயக் கல்லூரி ஒன்றை தொடங்கும் இப்பல்கலைக்கழகத் தின் செயல் சிறப்புக்குரியது. முன்னாள் மாணவர்களின் உதவியுடன் அறக்கட்டளை நிதியம் அமைத்துள்ளது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. அவர்களும் தாராளமாக நன்கொடை தருவது இப்பல்கலைக்கழகம் சிறந்த வற்றை செய்ய ஊக்கம் தரும்.

தற்போது பட்டம் பெற்றவர்களில் சிலர் இந்த வளாக வாழ்க்கைக்கு நன்றி தெரிவித்து, புதிய வாழ்வை தொடங்கக்கூடும். சிலர் கூடுதலாக படிப்பை தொடர்வார்கள். போட்டி நிறைந்த இவ்வுலகில் இரக்கமும், தாராள குணமும் குறைவாக இருக்கலாம்.

நீங்கள் அதிகம் இரக்கமுள்ளவர்களாகவும், தாராளமானவர்களாகவும் இருக்க முயற்சிசெய்தால் நிச்சயமாக சமநிலையைக் காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக இவ்விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மதியம் 12 மணியளவில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி - லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு புதுச்சேரி போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்.

மாணவர்கள் எதிர்ப்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க மாணவர் பேரவையினர் அழைப்பு விடுத்தனர்.

அதோடு, குடியரசுத் தலைவர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வரும்போது மாணவர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலும் வெளியானது.

இதற்கிடையே குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் அருண்குமார், கிருத்திகா ஆகியோர் தாங்கள் பட்டத்தை பெறமாட்டோம் என சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந் தனர். அவர்கள் பட்டமளிப்பு விழாவுக்கு வரவில்லை.

இப்பிரச்சினையால் பட்டமளிப்பு விழா நடந்த அரங்கத்துக்குள், தங்கப்பதக்கம் மற்றும் ஆராய்ச்சி பட்டம் பெறும் மாணவர்கள் 322 பேர் மட்டும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். இளநிலை, முதுநிலை, தொலைதூரக் கல்வி ஆகியவற்றில் படித்து பட்டம் பெறும் மாணவர்களும் பெற்றோரும் நிகழ்வைக் காண தனி அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x