Published : 23 Dec 2019 08:29 PM
Last Updated : 23 Dec 2019 08:29 PM
2021-ல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க, கிராம ஊராட்சிகளுக்கு ஆளுங்கட்சி அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என்பதால் தலைவர், உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டி அதிகரிகரித்துள்ளது அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டிச.,27, 30 என, இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தவிர, ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் என, 4 பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது.
இவற்றில் பிற பதவியைக் காட்டிலும், ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆர்வம் அதிகரிப்பது தெரிகிறது.
மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பில், வாய்ப்பு கிடைக்காதவர்கள் சில உள்ளடி வேலைகளை செய்து, கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வாய்ப்பு இருக்கும் என்பதால் சில மாவட்டத்தில் கட்சியினரே ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.
இருப்பினும், 2021ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலால் ஆளுங்கட்சியினர் தங்களது ஆட்சியை தக்க வைக்க, கிராம ஊராட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கலாம் என்ற நம்பிக்கையில் ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கிராக்கி அதிகரிக்கிறது எனவும் சில அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
தமாகாவைச் சேர்ந்த ராஜாசேகரன் என்பவர் கூறியது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தபோது, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் போட்டியிட ஆர்வம் இருந்தது.
ஆனாலும், சுழற்சி முறையிலான இடஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்ததால், வேட்பு மனுதாக்கல் செய்த பின், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இது போன்ற சூழலில் ஒன்றியம், மாவட்ட கவுன்சிலருக்கான வார்டுகள் மறு சீரமைப்பில், ஏற்கெனவே தங்களுக்கு சாதகமான கிராமங்கள் மாற்றியதால் கடந்த தடவையைவிட, இந்த முறை கவுன்சிலர் பதவிக்கு பலர் ஆர்வம் காட்டவில்லை.
இது ஒரு காரணமாக இருந்தாலும், இன்னொரு முக்கிய காரணம் 2021-ல் தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்தும், ஆட்சியை தக்க வைக்கவும் அரசும் கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை பணிகளுக்கென அதிகமான நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது.
கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவ தோடு, நல்ல வருவாயை பெற முடியும் என்ற நம்பிக்கையில் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களாக போட்டியிடுவோர் கனவு காண்கின்றனர்.
இது போன்ற சூழலில் தான் கிராம ஊராட்சி தலைவர், உறுப்பினர் பதவிக்கு ஆர்வம் காட்டி ஏராளமானோர் கள மிறங்கியுள்ளனர்.
மேலும், பல இடங்களில் தொன்று, தொட்டு ஒருவர் அல்லது அவரது குடும்பத்தினரே தலைவர் பதவிக்கு வர வேண்டுமா என்ற எதிர்ப்பால் ஊராட்சி பதவிக்கு போட்டி அதிகரித்துள்ளது.
இது போன்ற சூழலில் பெரும்பாலான மாவட்டத்தில் கட்சி வேட்பாளர்களைவிட, ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கு போட்டியிடுவோர் பணத்தை தண்ணியாக செலவிடுகின்றனர். ஓட்டுப்பதிவுக் கான நாள் நெருங்க, நெருங்க கிராமங்களில் காலை, மாலையில் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT