Published : 23 Dec 2019 07:53 PM
Last Updated : 23 Dec 2019 07:53 PM
திண்டுக்கல் அருகே கிராம மக்கள் குடகனாறு நீர் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி தேர்தலை புறக்கணித்து கடந்த சில தினங்களாக ஊர் மைதானத்தில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழமலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் மழையடிவாரத்தில் உள்ள ஆத்தூர் நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் மூலம் சென்றடைந்து அங்கிருந்து குடகனாறு வழியாக வழியோர கிராமங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி ஆற்றில் சென்று குடகனாறு அணையை சென்றடைகிறது.
இந்நிலையில் ஆத்தூர் நீர்த்தேக்கத்திற்கு வரும் கால்வாயை மறித்து பொதுப்பணித்துறையினரால் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு தண்ணீரை நிலக்கோட்டை பகுதிக்கு திருப்பிவிட்டுள்ளனர்.
இதனால் ஆத்தூர் நீர்த்தேக்கம் நிரம்பாதநிலையில் இதையடுத்து குடகனாற்றில் தண்ணீர் சென்று வழியோரகிராம கண்மாய்களை நிரம்பாதநிலை உள்ளது. சில ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வதால் அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், பொன்னிமாந்துரை உள்ளிட்ட வழியோர கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
இதனால் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமலும், குடிநீர் பிரச்சனையாலும் தவித்து வருகின்றனர். குடகனாறு நதிநீர் பங்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி ஆற்றின் வழியோர கிராமங்களான அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர் மைதானத்தில் அமர்ந்து கடந்த சில தினங்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த பிரச்சினை குறித்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., வேலு மக்களிடம் நேரில் சென்றும், ஆட்சியர் அலுவலகத்திலும் பேசியும் பலனில்லை.
இரண்டு கிராமமக்களும் போராட்டத்தை தொடர்கின்றனர். மயிலாப்பூர் கிராமம் குட்டத்துஆவாரம்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்டது. இந்த கிராமம் 11, 12 ஆகிய கிராம ஊராட்சி வார்டுகளில் உள்ளது. இரண்டு வார்டுகளிலும் போட்டியிடும் தலா ஐந்து வேட்பாளர்கள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவுதரும் வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் மக்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் மயிலாப்பூர் கிராமத்தில் கிராம ஊராட்சித்தலைவர் பதவி, ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை.
பிரச்சாரம் செய்ய வந்தால் ஊர் எல்லையிலேயே திருப்பி அனுப்பி விடுகின்றனர். அனுமந்தராயன் கோட்டையில் தொடங்கிய குடகனாறு தண்ணீர் பங்கீடு பிரச்சனை போராட்டம் தற்போது மயிலாப்பூரிலும் தொடர்வதால் மாவட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் இவர்களை சமாதானப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT