Published : 23 Dec 2019 05:34 PM
Last Updated : 23 Dec 2019 05:34 PM
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் தொடர் தோல்வியை பாஜக சந்தித்து வருகிறது. பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியிலே நின்றால் நிச்சயமாக பாஜகவை ஒவ்வொரு தேர்தலிலும் தோற்கடிக்க முடியும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:
“நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் மூன்று மாநிலங்களில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது, மகாராஷ்டிராவிலேயே அவர்கள் பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க முயன்றபோது அது தோற்கடிக்கப்பட்டது. இன்று ஜார்க்கண்டில் முழுமையான தோல்வியை பாஜக சந்தித்துள்ளது. ஆகவே, பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல. அனைத்து எதிர்க்கட்சிகள் ஓரணியிலே நின்றால் நிச்சயமாக பாஜகவை ஒவ்வொரு தேர்தலிலும் தோற்கடிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இன்று காலையிலே ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தினோம். இதை வெற்றி பெறச் செய்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அனைத்து சமுதாய மக்களுக்கும், குறிப்பாக மாணவர், இளைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்திற்கு தற்போது வந்திருப்பது ஏதோ சாதாரண பிரச்சினை அல்ல. குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது.
இதில் வினோதத்தைப் பாருங்கள். இந்துக்களை அனுமதிக்கும் அரசு இலங்கையிலுள்ள தமிழ் இந்துக்களை அனுமதிப்பதில்லை. கிறிஸ்தவர்களை அனுமதிப்போம். ஆனால் பூட்டானில் உள்ள கிறிஸ்தவர்களை அனுமதிக்க மாட்டோம். முன்னுக்குப் பின் முரண்.
இதற்கெல்லாம் எந்தவிதமான தர்க்கரீதியான வாதம் எதுவும் கிடையாது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டோம். நான் ஆறு கேள்விகளில் இந்தக் கேள்வியையும் வைத்தேன். ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா எந்தவிதமான பதிலையும் இன்றுவரை அளிக்கவில்லை. இன்றைய தேதி வரை பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மைத் தமிழர்கள் இந்துக்களாக, முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் மீது துன்புறுத்தல் இருந்தால் அவர்கள் அகதிகளாக வந்தால் அவர்கள் அனுமதிக்கப்படவேண்டும். ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆகவே இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்தியாவை ஜெர்மனியாக்க ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராடும் மாணவர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்”.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT