Published : 23 Dec 2019 10:18 AM
Last Updated : 23 Dec 2019 10:18 AM
திருப்பூரில் ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திருப்பூரில் அவிநாசி சாலையில் குமார் நகர் தொடங்கி அவிநாசி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் சாலையோரங்களில் அதிகளவில் ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த கடைகளில் நேற்று உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கே.விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் பெரியார் காலனி, குமார் நகர், திருமுருகன்பூண்டி, அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் 29 மீன் விற்பனை கடைகள், 24 கோழி இறைச்சி கடைகள், 18 ஆடு இறைச்சி கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உண்ண உகந்தவை இல்லை எனக் கருதப்பட்ட 4 கோழிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் கூறும்போது, ‘சோதனையின்போது உரிமம் இல்லாமல் செயல்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கம் பெறப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடைகளின் வளாகங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
இறைச்சிகளை ஈ மொய்க்காமல் பாதுகாப்பாக விற்பனைக்கு வைக்க வேண்டும். கோழி இறைச்சிகளின் மீதுசாயம் பூசக் கூடாது.
கோழிகளை நுகர்வோர் கண் பார்வையில் வெட்டி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். வாழை இலையில் இறைச்சிகளை நுகர்வோருக்கு கட்டிக் கொடுக்க வேண்டும். கழிவுகளை வாய்க்காலில் கொட்டக் கூடாது. ஆடுகளை அவற்றுக்கான வதைக்கூடங்களில் மட்டுமே வெட்ட வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT