Published : 23 Dec 2019 08:39 AM
Last Updated : 23 Dec 2019 08:39 AM
தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மதுரை மூன்றுமாவடியில் நேற்று நடைபெற்றது. கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்றார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியதாவது:
கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்ல வரவில்லை. சென்னையில் (இன்று) திங்கள்கிழமை நடைபெறஉள்ள பேரணிக்கு உங்களது வாழ்த்துகளை பெற்றுச் செல்ல வந்துள்ளேன். பேரணிக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் உடைத்து வெற்றி பெற வேண்டும்எனக் கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
1955-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் உன்னதமானது. ஒரு நாட்டில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது என்பதுமனிதாபிமானத்தைக் காட்டுவதாகும். அதில் பாஜக ஆட்சி ஒருதிருத்தம் செய்திருக்கிறது. அனைவருக்கும் குடியுரிமை என்று சொன்னால் பாராட்டியிருக்கலாம். ஆனால் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்ததால் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். மதத்தால் மக்களைப் பிளவுபடுத்தினால் வேடிக்கை பார்க்க முடியுமா? தமிழர்கள் இதை எதிர்த்தாக வேண்டும்.
அதிமுக எம்பிக்கள் 11 பேர், பாமக எம்பி ஒருவர் உட்பட 12 பேரும் சேர்ந்து இச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற வைத்தார்கள். இதன் மூலம் அவர்கள் சிறுபான்மையினர், ஈழத் தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகம் செய்துள்ளார்கள்.
இவர்கள் இன்னதென்று தெரி யாமல் செய்கிறார்கள் என்று பைபிளில் ஒரு வாசகம் உண்டு. ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தெரிந்தே தவறு செய்கிறார்கள்.
இந்தியாவில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டம்-ஒழுங்கைக் கெடுத்துள்ளனர். இந்தச் சட்டம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் அமைதியையும் கெடுத்திருக்கிறது.
தற்போது இந்தியாவில் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்படும் காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பொருளாதாரத்தை வளர்த்துக்காட்டுங்கள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குங்கள், புதியதிட்டங்களைக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறோம். ஆனால், மத்திய அரசு அதைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், பி.வில்சன், எம்எல்ஏ-க்கள் மூர்த்தி, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT