Published : 23 Dec 2019 08:37 AM
Last Updated : 23 Dec 2019 08:37 AM

பிரதமர் மோடி இல்லையெனில் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து

சிவகாசி

மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி ஆகிய கிராமங்களில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது. மோடிபோன்ற இரும்பு மனிதர் இல்லையென்றால் வன்முறையால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும். மோடியின் தலைமை இந்தியாவுக்கும், பழனிசாமியின் தலைமை தமிழகத்துக்கும் தேவை.

அதிமுக ஆதரிக்கும் அனைத்துதிட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டுப்பற்றுள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு சிறிதும் கிடையாது.

மோடி நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதை திசைதிருப்பி நாட்டை துண்டாடும் வகையில் திமுக, காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. நாட்டைப்பிளவுபடுத்தும் திமுக, உள்ளாட்சித் தேர்தலில் மக்களிடம் வாக்குகேட்கும் தகுதியை இழந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலோடு திமுகவின் நாடகம் முடிந்து விட்டது. அதிமுக அனைத்து மதத்துக்காகவும் போராடும்.

மற்ற நாட்டில் உள்ளவர்களுக்காக..

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லாத நிலையில் ஏன் மற்ற நாட்டில் உள்ள இஸ்லாமியர்களுக்காகப் போராடுகிறீர்கள்? இந்திய நாட்டை அவமதிக்கும் நாட்டில் உள்ளவர்களுக்காக ஏன் இங்கு போராட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந் திரபாலாஜி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x