Published : 23 Dec 2019 08:08 AM
Last Updated : 23 Dec 2019 08:08 AM
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சுற்றுலா பயணச்சீட்டு முறையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. ஒருநாள், 3 நாள், 5 நாள் என மூன்று வகைகளில் இந்த பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
சென்னையில் புறநகர் பகுதிகள் மற்றும் சுற்றுலா பகுதிகளை இணைக்கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 450-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமார் 9 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என வழக்கமாக செல்பவர்கள் மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் என சுற்றுலா செல்லவும் அதிகமானோர் ரயிலில் பயணம் செய்கின்றனர். எனவே, மும்பையில் இருப்பது போல, சென்னையிலும் சுற்றுலா பயணச்சீட்டு முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சென்னையிலும் பொதுமக்கள் வசதிக்காக ரயில் சுற்றுலா பயணச்சீட்டு முறை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ஒரு நாள், 3 நாட்கள், 5 நாட்கள் என 3 வகையான சுற்றுலா பயணச் சீட்டுகள் சென்னையில் உள்ள புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் வழங்கப்படுகின்றன.
2-ம் வகுப்பில் பயணம் செய்ய சிறுவர்கள், பெரியவர்களுக்கு ஒருநாள் பாஸ் ரூ.45, ரூ.70. மூன்று நாள் பாஸ் ரூ.70, ரூ.115. ஐந்து நாள் பாஸ் ரூ.80, ரூ.140 என்றும், முதல் வகுப்பில் பயணம் செய்ய சிறுவர்கள், பெரியவர்களுக்கு ஒருநாள் பாஸ் ரூ.190, ரூ.295. மூன்று நாள் பாஸ் ரூ.285, ரூ.480. ஐந்து நாள் பாஸ் ரூ.330, ரூ.575 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
3 நாட்களுக்கு முன்பாக இந்தபயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம். எந்தவித கட்டண சலுகையும் இதற்கு பொருந்தாது. வாங்கிய சீட்டுக்கு பணத்தை திரும்ப பெற முடியாது. ரத்து செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.30 பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...