Published : 23 Dec 2019 07:42 AM
Last Updated : 23 Dec 2019 07:42 AM
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்தது. பொருட்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 2018-ம் ஆண்டில் 30 கோடி உள்நாட்டு பயணிகள், 61 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் என சுமார் 40 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ரூ.16 கோடியே 47 லட்சத்திலும், வேளாங்கண்ணியில் ரூ.5 கோடியே 60 லட்சத்திலும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. மேலும், முக்கியமான சுற்றுலா தலங்களில் ரூ.99 கோடியே 91 லட்சத்திலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாட்டு மூலதன திட்டம் தொகுதி 4-ன் கீழ் ரூ.288 கோடியிலும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடந்துவருகின்றன. சிதம்பரம், ஆலங்குடி, வேதாரண்யத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள், காஞ்சிபுரத்தில் யாத்ரீகர் நிவாஸ் கட்டுதல், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு சென்றுவர படகுகள் வாங்குதல் போன்ற பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டில் நிறைவடையும்.
தமிழக அரசின் திட்டங்கள் பலரால் பாராட்டப் பெற்றாலும், அதை ஒப்புக்கொள்ள முடியாமல் சிலர் நம் பாதையில் தடைகளை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். உலகத்திலேயே தாங்கள்தான் திறமைசாலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களின் பேராதரவை பெற்றுள்ள உண்மையான திறமைசாலிகள் யார் என்பதும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
விழாவுக்கு தலைமையேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘சுற்றுலாவின் மூலம் தமிழகத்தில் தொழில் துறையும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன’’ என்றார்.
விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், பெஞ்சமின், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் அசோக் டோங்ரே, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் வே.அமுதவல்லி மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பொருட்காட்சி வார நாட்களில் பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 10 முதல் இரவு 10 மணி வரையும் திறந்திருக்கும் என்றும், பெரியவர்களுக்கு ரூ.35-, சிறியவர்களுக்கு (6 முதல் 12 வயது வரை) ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment