Published : 23 Dec 2019 07:38 AM
Last Updated : 23 Dec 2019 07:38 AM
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2011-ம் ஆண்டுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கு முதிர்வு தொகை உயர்த்தி வழங்கப்படாது என்று சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளனர்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய குழந்தைக்கு 3 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு ஆரம்ப கால முதலீடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கடந்த 2011 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.22,200-மும் 2 குழந்தை இருந்தால் தலா 15200-ம் செலுத்தப்பட்டது. இந்தத் தொகை கடந்த 2011 ஆகஸ்ட்டுக்கு பிறகு ஒரு பெண் குழந்தையாக இருந்தால் ரூ.50 ஆயிரமாகவும் 2 குழந்தைகள் இருந்தால் தலா 25.000-மாகவும் உயர்த்தப்பட்டு சமூகநலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படுகிறது.
இதனால், 2011-ம் ஆண்டுக்குப் பிறகு விண்ணப்பித்து திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தால் சுமார் ரூ.3 லட்சத்து 34 ஆயிரமும் 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் கிடைக்கிறது. ஆனால், 2011-ம் ஆண்டுக்கு முன்பாக இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஒரு பெண் குழந்தையாக இருந்தால் சுமார் ரூ.1 லட்சமும் 2 குழந்தையாக இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.60,000-மும் கிடைக்கிறது.
இதனால், 2011-ம் ஆண்டுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கு முதலீடு தொகை உயர்த்தி வழங்கப்படுமா என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவ்வாறு, உயர்த்தி வழங்கப்படாது என்று சமூகநலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
2011-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்காக விண்ணப்பித்தவர்களின் முதிர்வு தொகையில் கூடுதல் பணம் செலுத்தப்படாது. அவர்கள், விண்ணப்பித்த காலக்கட்டத்துக்கு ஏற்ப முதிர்வு தொகைதான் வழங்கப்படும். அதில், எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment