Last Updated : 21 Dec, 2019 05:09 PM

 

Published : 21 Dec 2019 05:09 PM
Last Updated : 21 Dec 2019 05:09 PM

புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனம் ரத்தாக வாய்ப்பு; தலைமைச் செயலர் குழு அமைத்து ஆளுநர் இறுதி செய்ய மத்திய அரசு உத்தரவு

மாநிலத் தேர்தல் ஆணையரை புதுச்சேரி அரசு நியமித்தாலும், மத்திய உள்துறை தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து தேசிய அளவில் விண்ணப்பித்து தகுதியானவரைத் தேர்வு செய்யவும், அவரை ஆளுநரே இறுதி செய்வார் என்றும் தெரிவித்துள்ளதால் தற்போது நியமித்த ஆணையர் நியமனம் ரத்தாக வாய்ப்புள்ளது.

புதுச்சேரியில் இதுவரை இரு முறை மட்டுமே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2006-ல் கடைசியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதையடுத்து கடந்த 2011 முதல் தற்போது வரை நடத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் ஆணையர் தேர்வுக்காக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 10-ம் தேதி விளம்பரம் வெளியானது. விண்ணப்பங்களை ஜூலை 29-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வயது வரம்பு 65. 25 ஆண்டுகளுக்கு குறையாக புதுச்சேரி அரசில் அதிகாரியாகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டு பிரச்சினை எழுப்பப்பட்டது. அரசிதழில் வெளியாகாமல் மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிக்க விளம்பரம் வந்ததாகக் குறிப்பிட்டு சர்ச்சையானது. நேரடியாக ஆளுநர் கிரண்பேடி மீது குற்றச்சாட்டு முன்வைத்தது புதுச்சேரி அரசு.

இதையடுத்து சபாநாயகர் சிவக்கொழுந்து, உள்ளாட்சித் துறை விளம்பரத்தை ரத்து செய்தார். விதி மீறியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அதையடுத்து தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். ஐந்து மாதங்களாகியும் தேர்தல் நடத்தும் அறிகுறியும் ஏதும் இல்லாத சூழலே நிலவியது. சபாநயாகர் உத்தரவுப்படி நடவடிக்கையும் விதி மீறியோர் மீது இதுவரை எடுக்கப்படவில்லை.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச் செயலர் மூலம் ஆணையர் நியமனம் தொடர்பாகக் கடிதம் எழுதினார்.

புதுச்சேரி மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக தலைமைச் செயலர் அஸ்வானி குமாருக்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் யூனியன் பிரதேசங்களுக்கான ஆலோசகர் ஜித்தேந்திர அகர்வால் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், "புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தி முடிக்க, தேர்தல் ஆணையரை வெளிப்படையாகவும், நியாயமாகவும், பலரை பங்கேற்கச் செய்யும் போட்டி மூலம் தேர்வு செய்ய வேண்டும். தகுதியான விண்ணப்பங்களை தேசிய அளவில் விளம்பரம் செய்து வரவேற்க வேண்டும். ஆணையரைத் தேர்வு செய்வதற்கு தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். தேர்வுக் குழு மற்றும் விதிமுறைகளையும், இறுதி முடிவையும் துணைநிலை ஆளுநர் எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "மத்திய உள்துறை உத்தரவைப் பார்த்தால் தற்போது நியமித்த ஆணையர் நியமனம் ரத்தாகும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது" என்றனர். இது புதுச்சேரி அரசுக்கு பலத்த பின்னடைவு என்றே பலரும் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x