Published : 21 Dec 2019 08:39 AM
Last Updated : 21 Dec 2019 08:39 AM

சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே 1000 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம்

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் சில்ஹல்லா ஆற்றின் குறுக்கே 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்கள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழ்நாடு மின் வாரியம் சமர்ப்பித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்குமுன் காமராஜர் ஆட்சிக் காலத்தின்போது, ஏராளமான அணைகள் மற்றும் நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நீர் மின் நிலையங்களில் இருந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில், குந்தா நீர் மின் திட்டங்கள் தமிழகத்தின் மிக முக்கியமானதாகும். பிற்காலத்தில் அணு மின் மற்றும் அனல் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் நிலையங்கள் வந்தவுடன், இவை ‘பேக் அப்’ மின் நிலையங்களாக மாற்றப்பட்டன.

அதாவது, மின் தேவை அதிகமாக இருக்கும் ‘பீக் ஹவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் 6 மணி நேரம் மட்டுமே இந்த நீர் மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் அனல் மின்நிலையம் மற்றும் காற்றாலை மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டால், இந்த நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு மின் தேவை நிவர்த்தி செய்யப்படும். தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த மின் நிலையங்கள் மூலம் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அதிகரித்தபோது, புதிய மின் திட்டங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

கிடப்பில் போடப்பட்ட நீர் மின் திட்டம்

இதையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, நீலகிரி மாவட்டத்தில் சில்ஹல்லாவில் 1000 மெகாவாட் நீர் மின் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்காத நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தமிழக மின்வாரியம் இறங்கியுள்ளது. தற்போது குந்தா அருகே அன்னமலை கோயில் அடிவாரம் மற்றும் ராம் நகர் ஆகிய இருஇடங்களிலும் அணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இங்கு நீரேற்றுகுகை மின் நிலையமாக அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.4200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் மெரிலேண்ட் பகுதியில் மலையைக் குடைந்து சுமார் 5 கிமீ முதல் 10 கிமீ தொலைவிலும், கடல் மட்டத்துக்குமேல் 1500 மீட்டர் உயரத்திலும் சுரங்கம் அமைக்கப்படவுள்ளது.

இதில், 250 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய நான்கு டர்பின்கள் பொருத்தப்பட்டு, 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படவுள்ளது.இந்த மின் நிலையம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. சர்வே பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டம் குறித்த முழு அறிக்கையை மத்திய மின் வாரியம், சுற்றுச்சூழல் துறையிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், மின் நிலையம் அமையவுள்ள எமரால்டு, குந்தா, அன்னமலை கோயில் அடிவாரம், அணைகள் கட்டப்படவுள்ள பகுதிகளில் மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். அணை மற்றும் நீர் மின் நிலையம் கட்டுவதற்காக குந்தா பகுதியில் மொத்தம் 777 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதில், 445 ஏக்கர் நிலம் வனம் மற்றும் அரசு நிலமும், மீதமுள்ள பகுதி தனியார் நிலமுமாகும். மத்திய அரசு ஒப்புதலுக்குப் பின்பு மின் நிலையம் மற்றும் அணை கட்டும் பணிகளை தொடங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

மின் தட்டுப்பாட்டை போக்குவதே நோக்கம்

இத்திட்டத்தில் நாள் ஒன்றுக்கு நான்கு டர்பின்கள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும். மின் தேவை மிகவும் குறைந்த நேரத்தில் 1200 மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தி ராட்சத மோட்டார்கள் இயக்கப்பட்டு இந்தக் குழாய்கள் மூலம் தண்ணீர், அன்னமலை அடிவாரத்தில் இருந்து ராம் நகர் பகுதியில் அமையவுள்ள அணைக்கு கொண்டு செல்லப்படும். உற்பத்தியைவிட, தண்ணீர் கொண்டு செல்ல அதிக மின் செலவு ஏற்பட்டாலும், மின் தேவை அதிகம் உள்ள சமயங்களில் மின் தட்டுப்பாட்டை போக்குவதே திட்டத்தின் நோக்கம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘மலைப் பகுதிகளில் மின் நிலையம் அமைக்க மத்திய அரசின் 10 துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக தனியார் அமைப்பிடம் திட்ட மதிப்பீடு மற்றும் முழுமையான திட்டம் குறித்த அறிக்கையை தயார் செய்யும் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 2020-ம் ஆண்டு இறுதியில் இதற்கான முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படும். இத்திட்டத்துக்கான செலவு அதிகமாக இருந்தாலும், மின் உற்பத்தி தொடங்கியபின், மின் வாரியத்தின் செலவு மிகவும் குறையும்.

முற்றிலும் வேறுபட்ட மின் நிலையம்

இந்த நீர் மின் நிலையம் குந்தா மின் உற்பத்திக்குட்பட்ட குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் மற்றும் சிங்காரா போன்ற மின் நிலையங்கள்போல் இன்றி சில்ஹல்லா நீர் மின் நிலையம் முற்றிலும் மாறுபட்டது. இந்த திட்டத்தில், ராம் நகர் பகுதியில் கட்டப்படும் அணைக்கு எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும். அணையில் இருந்து குகை மூலமாக மெரிலேண்டு பகுதியில் அமைக்கப்படும் மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்யப்படும்.

மின் உற்பத்திக்கு பின்பு ராட்சத குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அன்னமலை கோயில் அருகே அமைக்கப்படவுள்ள அணையில் தேக்கி வைக்கப்படும். பகல் நேரங்களில் மீண்டும் ராட்சதக் குழாய்கள் மூலம் ராம் நகர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அணைக்கு கொண்டு செல்லப்படும் என்பதால் இத்திட்டத்தில் தண்ணீர் வீணாகாது. அதேசமயம் மழை பெய்யவில்லை என்றாலும் மின் உற்பத்தி பாதிக்காது. எனவே ஆண்டு முழுக்க மின் உற்பத்தி மேற்கொள்ளப்படும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x